T20 World Cup : இந்திய அணியில் ஆலோசகராக இடம்பெற்ற தோனிக்கு எதிர்ப்பு

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது, விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இந்தியாவுக்காக கடந்த 4 வருடங்களாக எந்த ஒரு டி20 போட்டியிலும் வாய்ப்பு பெறாத தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

MS Dhoni and Virat Kohli | Getty


அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் வருன் சக்ரவர்த்தி உட்பட மேலும் சில இளம் வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது, இருப்பினும் ஷிகர் தவான், சஹால் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் அணியில் சேர்க்கப்படாதது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.


எம்எஸ் தோனி : இவை அனைத்தையும் விட கடந்த வருடம் ஓய்வு பெற்ற நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்து இந்திய ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கும் எஞ்சிய ஐபிஎல் 2021 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாட இருக்கும் தோனி அதே நாட்டில் ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் இணைந்து செயல்பட உள்ளார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


எதிர்ப்பு : இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக பிசிசிஐ உயர்மட்டக் குழுவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த முன்னாள் வாழ்நாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா என்பவர் இந்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகத்தை சீர் செய்யும் வகையில் "லோதா கமிட்டி" சில சீர்திருத்தங்களை பரிந்துரை செய்துள்ளது, அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த ஒரு அமைப்பிலும் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்க முடியாது என்பது முக்கியமான ஒன்றாகும்.

அதை மேற்கோள் காட்டி எம்எஸ் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு சஞ்சீவ் குப்தா எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ உயர்மட்ட குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் அதே நேரத்தில் இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படக் கூடாது என்பதே அவரின் வாதமாகும், இவர் ஏற்கனவே மத்திய பிரதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் சில வீரர்கள் மீது இதேபோல் புகார் தெரிவித்திருந்தார்.


பிசிசிஐ பதில் : இதை உறுதிப்படுத்திய பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில்,

ஆம், சௌரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா உள்ளிட்டோர் இடம் வகிக்கும் பிசிசிஐ உயர்மட்ட குழுவிற்கு குப்தா கடிதம் எழுதியுள்ளார். அவர் 38 (4) விதிப்படி ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்கக் கூடாது என்பதை மேற்கோள் காட்டி இந்த புகாரை தெரிவித்துள்ளார். இதுபற்றி பிசிசிஐ உயர்மட்டக்குழு அதனுடைய சட்ட ஆலோசகர்களிடம் தோனியின் நியமனத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என விவாதிக்க உள்ளது


என தெரிவித்தார். எம்எஸ் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று தோனிக்கு நன்றி செலுத்திய வேளையில் இந்த நியமனம் சம்பந்தமாக புகார் எழுந்துள்ளது இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Your Reaction