இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
![]() |
Old Trafford Ground (File) |
இதையடுத்து இந்தத் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் நகரில் இருக்கும் ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் துவங்குகிறது.
முன்னோட்டம் :
இங்கிலாந்து : சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த தொடரில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் இங்கிலாந்து கடைசி போட்டியில் வெற்றி பெற்று குறைந்தபட்சம் தொடரை 2 - 2 என சமன் செய்ய தயாராகி வருகிறது.
இங்கிலாந்தை பொருத்தவரை அந்த அணியின் பேட்டிங் தொடர்ந்து மோசமாக இருந்து வருகிறது, கேப்டன் ஜோ ரூட் தவிர இதர பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்க தடுமாறி வருகிறார்கள்.
இருப்பினும் 4வது போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மென்கள் ஹமீது மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தது அந்த அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சொந்த ஊராகும், எனவே சொந்த ஊரில் அவர் தலைமையில் இப்போட்டியில் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் இங்கிலாந்தின் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேக் லீச் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதால் மொய்ன் அலி அல்லது ஜானி பேர்ஸ்ட்டோ நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா : 3வது போட்டியில் 78 க்கு ஆல் அவுட்டாகி தோற்ற போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து இந்தியா 4வது போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது அணி வீரர்களிடையே மிகப்பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4வது போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர் புஜாரா ஆகியோர் லேசான காயம் காரணமாக அப்போட்டியின் கடைசி நாளில் பங்கேற்கவில்லை, இருப்பினும் 5வது போட்டியில் அவர்கள் விளையாடுவார்கள் என நம்பலாம், அதேபோல் தொடர்ச்சியாக விளையாடி வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மோசமான பார்ம் காரணமாக அஜிங்கிய ரஹானே நீக்கப்படுவாரா என தெரியவில்லை ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் சூரியகுமார் யாதவ் அல்லது ஹனுமா விஹாரி சேர்க்கப்படுவார்கள்.
4வது போட்டியில் சேர்க்கப்படாத ரவிச்சந்திரன் அஸ்வின் காயத்தால் விலகிய முகமது சமி ஆகியோர் கடைசி போட்டியில் விளையாடுவார்களா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஷார்துல் தாகூர், உமேஷ் யாதவ் என அணியில் இருக்கும் அனைவரின் சிறப்பான ஆட்டத்தால் 5வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 3 - 1 என்ற கணக்கில் 2007 க்கு பின் பின் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க தயாராகி வருகிறது.
புள்ளிவிவரங்கள் : போட்டி நடைபெறும் மான்செஸ்டர் மைதானத்தில் வரலாற்றில் இந்தியா இதுவரை மொத்தம் 9 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கியுள்ளது.
அதில் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெற்றதே கிடையாது, 4 போட்டிகளை டிரா செய்த இந்தியா 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
வெதர் ரிப்போர்ட் : போட்டி நடைபெறும் மான்செஸ்டர் நகரில் முதல் 3 நாட்களில் மழைக்கான வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளதாக அந்த நகர வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது, இதர நேரங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
இருப்பினும் இங்கிலாந்து கால சூழ் நிலையை நம்மால் 100% சரியாக கணிக்க முடியாது என இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் தெரிந்து கொண்டோம் என்பதால் திடீரென மழையின் குறுக்கீடு குறைந்து இந்த போட்டியின் முடிவு கிடைக்கும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட் : இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை விட மான்செஸ்டர் வேகமாக இருக்கும் ஒரு மைதானமாகும், ஏற்கனவே போட்டியின் போது மேகக்கூட்டங்களுடன் கூடிய வானிலை நிலவும் என்பதால் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் அதிகமாக விக்கெட்டுகளை எடுப்பார்கள்.
அதேபோல போட்டி நடைபெற நடைபெற இந்த மைதானத்தில் சுழல் பந்து வீச்சும் அதிகமாக எடுபட ஆரம்பிக்கும், முதல் இன்னிங்சில் இந்த மைதானம் பேட்டிங் செய்வதற்கு அற்புதமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது.