வெளிநாடுகளில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் : கேப்டன் விராட் கோலிக்கு முன் - பின்

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது, இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளில் இங்கிலாந்தை விட இந்தியா தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Virat Kohli Team India | Getty


கேப்டன் கிங் : கடந்த 2014 முதல் முழு நேர டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி இதுவரை 38 வெற்றிகளுடன் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார், அவர் தலைமையில் கடந்த 2016 முதல் 2021 ஜனவரி வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியா இருந்தது.


வெளிநாடுகளில் வெற்றி

சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் ஆகும் ஆனால் வெளிநாட்டில் எதிர் அணியை அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சுலபமான காரியமல்ல. வெளிநாடுகளிலும் நம்மால் வெற்றிபெற முடியும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தினார் என்றால்

தற்போதைய கேப்டன் விராட் கோலி அதை முழு மூச்சுடன் செயல்படுத்தி வெற்றியும் கண்டு வருகிறார், கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற அவரின் எண்ணம் அவருக்கு தற்போது கைமேல் பலனை கொடுத்து வருகிறது.


ஆஸ்திரேலியாவில் வெற்றி : கடந்த 2019ல் ஆண்டு 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது நாம் அறிவோம்.

அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய மற்றும் இந்திய கேப்டன் என்ற சரித்திரத்தையும் விராட் கோலி படைத்தார்.

சேனா நாடுகள் : இந்தியா போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு சேனா நாடுகள் எனப்படும் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது என்பது சவாலான ஒன்றாகும்.

அந்த நிலையில் சேனா நாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த ஆசிய கேப்டனாக விராட் கோலி சமீபத்தில் புதிய சாதனை படைத்தார்.

விராட் கோலி - 6* வெற்றிகள்.

ஜாவேத் மியாண்டட் - 4 வெற்றிகள்.


விராட் கோலிக்கு முன் - பின் : இன்னும் சொல்லப்போனால் இந்த சவால் மிகுந்த சேனா நாடுகளில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை விராட் கோலிக்கு முன் பின் என 2 வகையாகப் பிரிக்கலாம்.

சேனா நாடுகளில் இந்தியாவின் வெற்றிகள் 2018 க்கு முன் :

போட்டிகள் - 50, வெற்றிகள் - 8, ட்ரா - 16, தோல்விகள் - 26, சதவிகிதம் - 0.307%.

சேனா நாடுகளில் இந்தியாவின் வெற்றிகள் 2018க்கு பின் :

போட்டிகள் - 23, வெற்றிகள் - 8, தோல்விகள் - 12, ட்ரா - 3, சதவிகிதம் - 0.666%.

அதாவது 1932 முதல் 2018 வரை இந்தியா இந்த 4 நாடுகளில் பெற்ற 8 வெற்றிகளை கடந்த 2018 - 2021 வரையிலான மூன்றே ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி பெற்று காட்டியுள்ளது.

வெஸ்ட்இண்டீஸ் : அதேபோல் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் 2 முறை டெஸ்ட் தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டனாக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

மேலும் இலங்கையில் கடந்த 1993க்கு பின் விராட் கோலி தலைமையிலான இந்தியா முதல் முறையாக கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு டெஸ்ட் தொடரை வென்றது.


மொத்தத்தில் விராட் கோலி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியாவின் இந்த வெற்றி நடை தொடர வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்திய ரசிகரின் விருப்பமாகும்.

Previous Post Next Post

Your Reaction