ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் 36 ஆவது போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
![]() |
Anrich Nortje |Josh Buttler (Photo : BCCI/IPL) |
இன்று நடைபெறும் 2 போட்டிகளின் முதல் போட்டியாக இப்போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது.
போட்டி விவரம் :
செப்டம்பர் 25, டெல்லி கேபிட்டல்ஸ் V ராஜஸ்தான் ராயல்ஸ், மதியம் 3.30, அபுதாபி.
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.
முன்னோட்டம் :
இதுவரை பங்கேற்றுள்ள 9 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 14 புள்ளிகளுடன் டெல்லி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை அந்த அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.
ஷ்ரேயஸ் ஐயர், அன்றிச் நோர்ட்ஜெ அணிக்கு திரும்பி உள்ளது அந்த அணிக்கு வலு மசேர்க்கிறது, பேட்டிங் பவுலிங் என அனைத்திலுமே அந்த அணி சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்புறம் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் இளம் கார்த்திக் தியாகி ஆகியோரின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் அணிக்கு எதிராக தோற்க இருந்த போட்டியை கடைசி 2 ஓவர்களில் யாரும் எதிர்பாரா வண்ணம் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
எவின் லெவிஸ், லியாம் லிவிங்ஸ்டன், தப்பிரிஸ் சம்சி போன்ற வெளி நாட்டு வீரர்களின் வருகையால் அந்த அணி ஓரளவு வலுவாக காணப்படுகிறது.
புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று டாப் 4 இடத்திற்குள் நுழைய போராட தயாராகி உள்ளது.
புள்ளிவிவரம் :
ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த 2 அணிகளும் இதுவரை மொத்தம் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- அதில் ராஜஸ்தான் 12 போட்டிகளில் வென்றுள்ளது, டெல்லி 11 போட்டிகளில் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன.
- இருப்பினும் போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டிகளிலும் டெல்லியே வென்றுள்ளது.
கடைசியாக மும்பையில் நடந்த இந்த 2 அணிகள் மோதிய போட்டியில் ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிட்ச் விவரம் :
போட்டி நடைபெறும் அபுதாபி மைதானம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டுக்குமே சமமாக கைகொடுத்து வருகிறது, இருப்பினும் இங்கு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சற்று அதிகமான உதவி கிடைப்பதை இதுவரை இந்த ஆண்டில் இம்மைதானத்தில் நடந்த போட்டிகளில் பார்த்தோம்.
- இங்கு கடைசியாக நடைபெற்ற 24 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 159 ஆகும்.
- இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 24 போட்டிகளில் 15 முறை சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன, 9 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன.
எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானிப்பது நல்லது.
உத்தேச அணிகள் :
வெற்றி பாதையில் நடந்து வருவதால் டெல்லி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
டெல்லி கேபிட்டல்ஸ் :
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், சிம்ரோன் ஹெட்மயேர், ரிஷப் பண்ட் (கேப்டன் - கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், அக்சார் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிஸோ ரபாடா,அன்றிச் நோர்ட்ஜெ, அவேஷ் கான்.
ராஜஸ்தான் அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளரான தென்னாப்பிரிக்காவின் தப்ரிஸ் சம்சி தேவைப்பட்டால் சேர்க்கப்படலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லெவிஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன் - கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், ரியன் பராக், ராகுல் தேவாடியா, மஹிபால் லொம்ரோர், கிறிஸ் மோரிஸ், சேட்டன் சக்கரியா, கார்த்திக் தியாகி, முஸ்தபிஸுர் ரஹ்மான்.