நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 32 போட்டிகளின் முடிவில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
![]() |
Chennai Super Kings (Photo : BCCI/IPL) |
மறக்க முடியாத 2020:
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் ஒரு வெற்றிகரமான அணியாக விளங்கும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மறக்கவே முடியாது, ஏனெனில் 2008 முதல் அப்போது வரை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையைக் கொண்ட அணியாக இருந்த வேலையில் திடீரென துபாய்க்கு ஐபிஎல் மாற்றப்பட்டது.
சுரேஷ் ரெய்னா போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாத காரணத்தாலும் பார்ம் இல்லாத வயது வாய்ந்த வீரர்களின் காரணத்தாலும் மோசமாக விளையாடிய சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல் அணியாக இழந்து பெருத்து அவமானத்தைச் சந்தித்தது.
மீண்டெண்ழுந்த சென்னை:
இருப்பினும் அதே வீரர்களை வைத்துக்கொண்டு இந்த வருடம் அந்த அணி 6 வெற்றிகளை பெற்று ஓரளவு பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது, இதன் வாயிலாக சென்ற வருடம் பெற்ற படுதோல்வியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டு எழுந்துள்ளது என கூறலாம்.
டாடி ஆர்மி :
சமீப காலமாக தோனி தலைமையிலான சென்னை அணி "டாடி ஆர்மி" என்ற பெயர் உள்ளது ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாடும் மற்ற அணிகளை விட இந்த அணியில் இருக்கும் 60% வீரர்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
- இந்த அணியின் சராசரி வயது என்பது 31 வருடம் மற்றும் 5 மாதங்களாக உள்ளது.
- சென்னை அணியில் தற்போது இருக்கும் 26 வீரர்களில் கேப்டன் தோனி உட்பட 2 பேர் 40 வயதை கடந்து விட்டனர், அணியில் அதிக வயது நிரம்பிய வீரராக தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாகிர் 42 வயதுடன் உள்ளார், தோனி 40 வயதில் இருக்கிறார்.
மீதம் உள்ளவர்களில் 12 பேர் 30 வயதைக் கடந்தவர்களாகவும் எஞ்சிய 12 பேர் 20 வயதை கடந்தவர்களாகவும் உள்ளனர்.
டவ்யன் பிராவோ, டுப்லஸ்ஸிஸ், ராபின் உத்தப்பா மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோர் 35 வயதை கடந்து விட்டனர்.
சாதிக்க முடியுமா :
கடந்த வருட ஐபிஎல் தொடர் திடீரென துபாய்க்கு மாற்றப்பட்டது அந்த அணியின் தோல்விக்கான பல காரணங்களில் ஒன்றாக அமைந்தது, ஏனெனில் இந்தியாவைவிட அதிக வெப்பநிலை நிலவும் துபாய் கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வயது காரணமாக தங்களை உட்படுத்திக் கொள்ள முடியாமல் சென்னை வீரர்கள் தடுமாறியதை நேரடியாகவே நாம் பார்த்தோம்.
அப்படிபட்ட நிலையில் மீண்டும் அதே துபாயில் இந்த வருடம் 2வது பகுதி ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் சென்னையால் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழலாம்.
- இருப்பினும் அனுபவசாலிகளுக்கும் சாதிக்க துடிப்பவர்களுக்கும் வயது என்பது வெறும் நம்பர் என கூறுவார்கள்.
அதன் அடிப்படையில் அனுபவமே ஆசான் என்று கூற்றுப்படி தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சாதித்து கோப்பையை வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் நம்புகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு வயதை காரணமாக வைத்து கேலி செய்தவர்களுக்கு இதே டாடி ஆர்மி கோப்பையை வென்று பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.