இந்தியா - இங்கிலாந்து மோதி வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5வது போட்டி ரத்து செய்யப்பட்டு தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது, இதுவரை நடைபெற்று முடிந்த 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் பாதியிலேயே நின்று போனது பலரையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
![]() |
| Old Trafford, Manchester (Getty Images) |
இந்த தொடர் ரத்து செய்யப்பட்டதற்கு ஐபிஎல் தான் காரணம் என இங்கிலாந்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இந்தியாவை விமர்சித்து வருகிறார்கள், இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முடிவு என்னவென்று தெரியாததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மிகவும் குழப்பம் அடைந்து உள்ளது.
200 கோடி நஷ்டம் : கடைசி போட்டியில் இருந்து இந்தியா பின் வாங்கி விட்டதால் 2 - 2 என தொடர் சமன் செய்யப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது, ஏனெனில் 5வது டெஸ்ட் போட்டி நடைபெறாத காரணத்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் 40 மில்லியன் பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 200 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒருவேளை தொடரில் இருந்து இந்தியா பின்வாங்கி விட்டது என கூறி தொடர் 2 - 2 என சமன் என்ற நிலை ஏற்பட்டால் அதை காரணமாக வைத்து அந்த 200 கோடி ரூபாயை இன்சூரன்ஸ் வாயிலாக பெற்றுவிடலாம் என்பது இங்கிலாந்தின் திட்டமாகும்.
ஐசிசி பஞ்சாயத்து : ஆனால் அடுத்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இந்த ஒரு டெஸ்ட் போட்டியை நாங்கள் நடத்தி தருகிறோம் என்று பிசிசிஐ அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இப்படிபட்ட குழப்பமான நிலையில் இந்தத் தொடரின் இறுதி முடிவை எடுப்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியை நாடியுள்ளது, இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குமாறு ஐசிசிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் அதிகாரபூர்வமாக கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
இறுதி முடிவு : இதையடுத்து விரைவில் இந்தப் பிரச்சனையை தீர்த்துவைக்க ஐசிசி களமிறங்க உள்ளது.
ஒருவேளை இந்த தொடரின் முடிவு 2 - 1 என ஐசிசி அறிவித்தால் இந்த தொடரை இந்தியா வென்று சாதனை படைக்கும், இங்கிலாந்திற்கு இழப்பு ஏற்படும்.
ஒருவேளை கடைசி தொடரில் இந்தியா பின்வாங்கி விட்டது என்பதை காரணம் காட்டி தொடர் 2 - 2 என சமனில் முடிந்ததாக ஐசிசி அறிவித்தால் அது இங்கிலாந்துக்கு சாதகமாகி 200 கோடி இழப்பையும் மீட்டுத்தர முடியும்.
எனவே ஐசிசி எடுக்கப்போகும் இந்த தொடரின் இறுதி முடிவுக்காக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் காத்திருக்கிறார்கள்.
