அஜிங்கிய ரகானேவை வீட்டுக்கு அனுப்ப இதுதான் வழி - வீரேந்திர சேவாக்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 - 1 என நிலை பெற்றிருந்த நிலையில் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது, இந்த தொடரில் இந்திய ஆதிக்கம் செலுத்தியதற்கு இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இந்திய பந்து வீச்சாளர்களும் மிக முக்கிய பங்காற்றினார். 

Ajinkya Rahane | Getty Images


மிடில் ஆர்டரில் இடம்பிடித்துள்ள கேப்டன் விராட் கோலி நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா மற்றும் துணை கேப்டன் ரஹானே ஆகியோர் இந்த தொடரில் மோசமாக விளையாடிய போதிலும் ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா தப்பிப் பிழைத்தது, இதில் இந்த தொடரின் 2வது பகுதியில் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் ஓரளவு பார்முக்கு திரும்பி அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்தனர்.


ரகானே மோசம் : இருப்பினும் துணை கேப்டனாக இருக்கும் அஜிங்கிய ரஹானே இந்த தொடரில் பங்கேற்ற 4 போட்டிகளில் வெறும் 109 ரன்களை 15.50 என்று படு மோசமான சராசரியில் மட்டுமே எடுத்தார், குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் அவர் 61 ரன்களை எடுக்காமல் இருந்திருந்தால் 100 ரன்களைக் கூட தாண்டி இருக்க மாட்டார்.

வலுக்கும் எதிர்ப்பு : இதனால் ரகானேவை அணியில் நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கூறிவருகிறார்கள். இந்நிலையில் ரஹானேவின் பார்ம் பற்றி முன்னாள் அதிரடி இந்திய வீரர் வீரேந்திர சேவாக் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில்,


"உங்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மோசமாக இருந்தால் உங்களுக்கு சொந்த மண்ணில் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் ஏனெனில் வெளிநாட்டு போட்டிகள் 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும் ஆனால் சொந்த மண்ணில் ஒவ்வொரு வருடமும் போட்டிகள் நடைபெறும். ஒருவேளை வெளிநாட்டில் போலவே சொந்த மண்ணிலும் நீங்கள் மோசமாக விளையாடினால் நீங்கள் விடை பெறும் நேரம் வந்துவிட்டது என நான் கூறுவேன்"

"ஒவ்வொருவருக்கும் மோசமான தருணங்கள் வருவது என்பது இயல்பான ஒன்றாகும், அதுபோன்ற நேரங்களில் அணி நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறதா இல்லையா என்பதே முக்கியமான அம்சமாகும். என்னைப் பொறுத்தவரை அஜிங்கிய ரஹானேவிற்கு அடுத்த முறை இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடர் நடைபெறும் போது கண்டிப்பாக வாய்ப்பளிக்க வேண்டும், அதிலும் அவர் சோபிக்க தவறினால் - "உங்களின் பங்களிப்பிற்கு நன்றி" என நாம் கூறிவிடலாம்"


என கூறிய சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஒரு அனுபவ நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ரகானேவிற்கு சொந்த மண்ணில் ஒரு வாய்ப்பளித்து பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் தனது அனுபவத்தில் பல ஜாம்பவான் பேட்ஸ்மேன் தொடர்ந்து 8 - 9 டெஸ்ட் போட்டிகளில் அரைசதங்கள் கூட அடிக்காமல் மோசமாக விளையாடிய தருணங்கள் இருந்ததாகவும் அதில் இருந்து அவர்கள் மீண்டு வந்து அடுத்த வருடத்திலேயே 1200 - 1500 ரன்களை விளாசி தங்களை நிரூபித்துள்ளார்கள் எனவும் விரேந்தர் சேவாக் தெரிவித்தார்.


பொதுவாக அஜிங்கிய ரஹானே வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படுபவர் என்ற பெயருண்டு ஏனெனில் இந்திய மண்ணில் அவர் பங்கேற்ற போட்டிகளில் வெறும் 36.57 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே ரன்களை எடுத்துள்ளார், இந்த நிலைமையில் அடுத்து நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும் என்பது நிதர்சனமாகும். 

Previous Post Next Post

Your Reaction