வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடருடன் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின்பு தற்போது 34 வயது நிரம்பிய துணை கேப்டன் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |
Virat Kohli | Rohit Sharma (Getty) |
தற்போது 32 வயது நிரம்பியுள்ள விராட் கோலி இது பற்றி கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது அணி நிர்வாகத்திடமும் ரோஹித் சர்மாவிடம் பேசியதாக தெரிகிறது, அந்த டெஸ்ட் தொடரின் போது முதல் போட்டியுடன் விராட் கோலி தனது குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பிய போதிலும் இந்தியா அபாரமாக விளையாடி 2 - 1 என தொடரை வென்று சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.
"விராட் கோலியே இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான இருக்க அவர் தனது வழக்கமான பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுக்க உள்ளார்"
என பிசிசிஐக்கு நெருங்கிய அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் தெரிவித்துள்ளார்.
பேட்டிங் பாதிப்பு : டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருப்பதால் அது தனது பேட்டிங்கை பாதிப்பதாக விராட் கோலி உணர்வதாக தெரிகிறது, எனவே 2022 மற்றும் 2023 என அடுத்தடுத்த வருடங்களில் நடைபெற உள்ள 2 உலக கோப்பைகளுக்கு முன்பாக தனது பேட்டிங்கை வலுப்படுத்த விராட் கோலி இந்த முடிவை எடுக்க உள்ளார்.
டெஸ்ட் கேப்டன் : இருப்பினும் 2018 முதல் தற்போது வரை வெளிநாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவர் தலைமையில் இந்தியா வரலாற்று வெற்றிகளைப் பெற்றுள்ளதால் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.
![]() |
Virat Kohli (Getty) |
"ரோஹித் சர்மா வெள்ளை பந்து கிரிக்கெட்டின் கேப்டனாகவும் விராட் கோலி தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக செயல்படும் பட்சத்தில் அது விராட் கோலிக்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது பேட்டிங்கை முன்னேற்ற தேவையான நேரத்தையும் புத்துணர்ச்சியும் அளிக்கும்" என பிசிசிஐ அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா கேப்டன் : மறுபுறம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ஒரு தலைசிறந்த ஓபனிங் பேட்ஸ்மேனாக பல சாதனைகளையும் வெற்றிகளையும் படைத்துள்ள ரோகித் சர்மா கேப்டனாக தகுதகுதியானவராக உள்ளார், குறிப்பாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு தேவையான அறிவையும் நுணுக்கங்களையும் பெற்றவராக திகழ்கிறார்.
![]() |
Rohit sharma (Getty) |
"ரோகித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணி கேப்டனாக நியமிக்கப்பட இதுவே சரியான தருணமாகும் ஏனெனில் இந்திய அணியில் இருக்கும் இந்த 2 மூத்த வீரர்களால் இந்தியாவுக்கு வெற்றி - வெற்றி என்ற வார்த்தைகளே அதிகமாக கிடைக்கும்" என நிர்வாகம் தெரிவிக்கிறது.
தோனி வெறும் ஆலோசகர் : அப்படி ஒரு நிலைமை வந்து விட்டால் தனது உடல் தகுதியை மிகச்சிறப்பாக வைத்திருக்கும் விராட் கோலியை போல ரோகித் சர்மாவும் தனது உடல் தகுதியை கச்சிதமாக வைத்திருக்க வேண்டும், அதேபோல அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்படும் எம்எஸ் தோனியால் கேப்டன்ஷிப்பில் தலையிட முடியாது.
![]() |
MS Dhoni | Virat Kohli (Getty) |
"அணியில் உள்ள வீரர்களுக்கு உதவும் மனதிலேயே எம்எஸ் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார், அவரைப் போன்ற ஒருவரின் உதவி கிடைக்கும் போது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இந்திய அணியின் வாய்ப்பாகும்" என பிசிசிஐ அதிகாரி கூறினார்.
ரோஹித் சர்மா - புள்ளிவிவரம் : ரோகித் சர்மா இதுவரை இந்தியாவிற்கு 2018 ஆசிய கோப்பை மற்றும் இலங்கையில் நடைபெற்ற நிதியாஸ் முத்தரப்பு கோப்பையில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், அந்த 2 தொடரிலுமே இந்தியா அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் இவர் ஏற்கனவே கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார், ஐபிஎல் தொடரில் கேப்டனாக, 5 கோப்பைகளை வென்றுள்ளார்.
- ஒன்டே : போட்டிகள் - 10, வெற்றிகள் - 8, தோல்விகள் - 2.
- டி20 : போட்டிகள் - 19, வெற்றிகள் - 15, தோல்விகள் - 4.
நடைமுறை : ஏற்கனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதே போல மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் என்ற நடைமுறை உள்ளது. இந்திய அணியிலும் கூட கடந்த 2007ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அணில் கும்ப்ளே மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் எம்எஸ் தோனி கேப்டன்சிப் செய்துள்ளார்கள்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்றது முதல் டெஸ்டில் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதில் டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமையில் அசத்தி வரும் இந்தியா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கோப்பையை வெல்ல தவறி வருகிறது, இதனால் அவருக்கு பதில் ரோகித் சர்மா வெள்ளை பந்து கிரிக்கெட் அணி கேப்டனாக வரவேண்டும் என பல ரசிகர்களும் கூறிவந்தனர், அவர்களின் எண்ணப்படி இந்த செய்தி உண்மையா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.