IND vs ENG: 2022ல் இங்கிலாந்தில் இந்தியா பங்குபெறும் டெஸ்ட் போட்டி

2022 இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Joe Root | Virat Kohli (Photo : Getty Images)


கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 4 போட்டிகள் முடிந்த நிலையில் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

ரசிகர்கள் ஏமாற்றம்:

இங்கிலாந்தை அபாரமாக எதிர்கொண்டு 2 - 1 என அந்த தொடரில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் மான்செஸ்டரில் நடக்க இருந்த 5வது போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது, கடந்த 2007க்கு பின் இங்கிலாந்தில் ஒரு தொடரை வெல்லும் வாய்ப்பு 5வது போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவிற்கு பறிபோனது, அதன் காரணமாக இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாட முடியாமல் போனது.

முடிவு என்ன:

இதனால் அந்தத் தொடரின் முடிவு 2 - 1 என இந்தியா வெற்றியா அல்லது 2 - 2 என சமனில் முடிந்ததா என தெரியாமல் இந்தியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

மேலும் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தியாவை விமர்சித்தது, அத்துடன் 5வது போட்டி சமனில் முடிவடைந்ததாக அறிவிக்க வேண்டும் எனவும் அப்படி செய்தால் இன்சூரன்ஸ் வாயிலாக இழப்புத் தொகையை மீட்டெடுக்க முடியும் எனவும் இங்கிலாந்து கூறியது. 

இந்தியாவின் பதில் :

அதற்கு சம்மதம் தெரிவிக்காத பிசிசிஐ அதை ஈடுகட்டும் வகையில் 2022இல் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பயணிக்கும் போது ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி தருகிறோம் அல்லது எக்ஸ்ட்ராவாக 2 டி20 போட்டிகளில் விளையாடி நஷ்டத்தை ஈடு கட்டுகிறோம் என பதிலளித்தது.

Team India (Getty Images)

அதற்கு சம்மதம் தெரிவிக்காத இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசியை இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தீர்த்து வைக்குமாறு கடிதம் எழுதியிருந்தது.

ஒரே போட்டியா அல்லது 5வது போட்டியா :

இந்த நிலையில் இஎஸ்பிஎன் இணையதளத்தில் 5வது டெஸ்ட் போட்டியால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட 2022இல் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, இருப்பினும் இந்தப் போட்டி எப்போது எங்கு நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

மேலும் இந்த போட்டி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5வது போட்டியாக நடைபெறுமா அல்லது தன்னிச்சையாக ஒரே ஒரு புதிய போட்டியாக நடைபெறுமா என்ற முடிவு இன்னும் எடுக்கவில்லை என தெரிகிறது.

ஐசிசி தலையீட்டுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5வது போட்டி :

இருப்பினும் 5வது போட்டி ரத்து செய்யப்பட்ட சில நாட்களில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி

"ரத்து செய்யப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி டெஸ்ட் தொடரின் 5வது போட்டியாகத்தான் நடைபெறும், தன்னிச்சையான ஒரு போட்டியாக நடைபெறாது"

என தெரிவித்திருந்தார். எனவே 2022இல் இங்கிலாந்துக்கு செல்லும் போது இந்தியா 5வது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்கும் என நம்பலாம்.

Previous Post Next Post

Your Reaction