பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருந்த கிரிக்கெட் தொடர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்து ரத்து செய்துள்ளன, இதனால் கடும் ஏமாற்றத்தில் உள்ள அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களின் எதிரியான இந்தியா தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம் என தினந்தோறும் விமர்சித்து வருகிறார்கள்.
![]() |
Shahid Afridi (File) |
குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருக்கும் ரமீஸ் ராஜா வரும் டி20 உலக கோப்பையில் இந்தியாவை பழி வாங்குவோம் என நேரடியாகவே சவால் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷாகித் அப்ரிடி இந்தியாவை விமர்சித்துள்ளார். கிரிக்கெட் பாகிஸ்தான் இணையதளத்தில் அவர்,
"ஒரு கிரிக்கெட் தொடரை திட்டமிடுவதில் மிகப் பெரிய சிரமங்கள் உள்ளதை நாம் அறிவோம், பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளிநாட்டு பாதுகாப்பு நிர்வாகம் தீர விசாரித்த பிறகே தங்கள் நாட்டு அணியை இன்னொரு நாட்டுக்கு அனுப்ப பச்சைக்கொடி காட்டுகன்றன"
"நியூஸிலாந்து வீரர்களை பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் ஆனால் அவர்கள் இவ்வாறு செய்தது மன்னிக்க முடியாத ஒன்றாகும். பாதுகாப்பு அம்சங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பகிர்ந்து அது பற்றிய நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருந்து இருக்க வேண்டும்"
என கூறிய அப்ரிடி பாதுகாப்பில் ஏதேனும் குறை இருந்திருந்தால் அதை நேரடியாக தங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
படிக்காத இந்தியா :
"ஒரு நாடு எங்களை புறக்கணிப்பது பரவாயில்லை ஆனால் மற்ற நாடுகளும் அதையே செய்வது தவறாகும், படித்த நாடுகளைச் சேர்ந்த அவர்கள் இந்தியாவை பின்பற்றக்கூடாது. கிரிக்கெட் என்பது உறவுகளை வளர்க்க வேண்டும் ஆனால் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அங்கிருந்து எங்களுக்கு மிரட்டல் வந்தபோது கூட நாங்கள் அங்கு பயணித்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்றோம். ஒரு தவறான இமெயிலை வைத்துக்கொண்டு கிரிக்கெட் தொடரை ரத்து செய்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க அளிப்பது போலாகும்,அது மிகவும் தவறானது".
என கூறிய அப்ரிடி நியூசிலாந்து,
இங்கிலாந்து போன்ற படித்த நாடுகள் இந்தியாவை பின்பற்றக் கூடாது என்றும் இந்தியாவிலிருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாகவும் தெரிவித்தார், மேலும் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டை புறக்கணிக்கும் இந்தியாவிற்கு துணைபோகின்றன எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்தியாவிலிருந்து நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு மின்னஞ்சல் வாயிலாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார், அதை வைத்துக்கொண்டு மீண்டும் ஷகித் அப்ரிடி இந்தியா மீது குற்றம் சுமத்துகிறார்.
இப்படி தினம்தோறும் இந்தியாவை விமர்சித்து வரும் பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.