ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் நேற்று இரவு துபாயில் நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
![]() |
Virat Kohli | Mohammed Siraj (Photo : BCCI/IPL) |
மும்பைக்கு எதிரான இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 56 ரன்களும் கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் எடுத்தனர், மும்பை சார்பில் பந்துவீச்சில் அசத்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
மும்பை பேட்டிங் சொதப்பல்:
பின் 166 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு அந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 28 பந்துகளில் 43 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தார், இதனால் 56/0 என நல்ல நிலையில் இருந்த அந்த அணி ரோகித் சர்மா அவுட் ஆனதும் மளமளவென தங்களது விக்கெட்டுகளை பரிசளித்தது.
ஹர்ஷல் படேல் ஹாட்ரிக்:
அந்த சரிவை பயன்படுத்திய பெங்களூர் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி மும்பைக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர், குறிப்பாக 16வது ஓவரை வீசிய பெங்களூருவின் ஹர்சல் படேல் அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் முறையே ஹர்திக் பாண்டியா, கிரன் பொல்லார்ட் மற்றும் ராகுல் சஹர் ஆகியோரை அடுத்தடுத்த 3 பந்துகளில் அவுட் செய்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.
![]() |
Virat Kohli | Rohit Sharma (Photo : BCCI/IPL) |
இதிலிருந்து மீளமுடியாத மும்பை வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது, இந்த சிறப்பான வெற்றியால் பெங்களூரு 3வது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் நிகழ்ந்த சாதனைகளின் பட்டியல் இதோ :
1. நேற்றைய போட்டியில் 51 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
2. அவர் உலக அளவில் 10,000 டி20 ரன்களை கடக்கும் 5வது வீரர் ஆவார். ஏற்கனவே கிறிஸ் கெயில், கிரண் பொல்லார்ட், ஷோயிப் மாலிக், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல்லை தொட்ட முதல் 4 வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
3. அத்துடன் கிறிஸ் கெயிலுக்கு பின் 10,000 டி20 ரன்களை அதிவேகமாக கடந்த 2வது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.
- கிறிஸ் கெயில் - 285 இன்னிங்ஸ்.
- விராட் கோலி - 299 இன்னிங்ஸ்.
4. நேற்றைய 51 ரன்களுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
- விராட் கோலி 47 முறை ஐபிஎல் போட்டிகளில் 50 க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார், ஷிகர் தவான் 46 முறை 50+ ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
5. அத்துடன் மும்பைக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பெங்களூரு பேட்டர் என்ற பெருமையையும் விராட்கோலி நேற்று எட்டினார்.
மும்பைக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த பெங்களூர் வீரர்கள்:
- விராட் கோலி - 721 ரன்கள்.
- ஏபி டீ வில்லியர்ஸ் - 693 ரன்கள்.
6. ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து 17வது வீரர் என்ற சாதனையை ஹர்சல் படேல் படைத்தார்.
7. மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 11வது இந்திய பவுலர் என்ற பெருமையும் சாமுவேல் பத்ரி, பிரவீன் குமார் ஆகியோருக்கு பின் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 3வது பெங்களூரு வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
8. இதுவரை 2021 ஐபிஎல் தொடரில் 23 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பவுலர் என்ற பெருமையை யுஸ்வென்ற சஹால் (2014ஆம் ஆண்டு) உடன் பகிர்ந்துகொண்டார்.
9. இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனை படைத்தார்.
பெங்களூருவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள்:
- ஜஸ்பிரித் பும்ரா - 24 விக்கெட்கள்.
- ரவீந்தர ஜடேஜா/சந்தீப் சர்மா/ஹர்பஜன் சிங்/ஆஷிஷ் நெஹ்ரா - தலா 23 விக்கெட்கள்.
10. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை முதல் முறையாக நேற்று பெங்களூரு அணி ஆல் அவுட் செய்தது, மேலும் வரலாற்றில் ஒரு ஐபிஎல் சீசனில் நடந்த 2 போட்டிகளிலும் மும்பையை முதல் முறையாக பெங்களூரு வீழ்த்தியுள்ளது.