தடுமாறும் நடப்பு சாம்பியன் மும்பை : ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல செய்ய வேண்டியது

நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறி வருகிறது.

Mumbai Indians (Photo : BCCI/IPL)


  • அந்த அணி இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் வெறும் 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் தத்தளித்து வருகிறது.

ஹாட்ரிக் கனவு:

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள அந்த அணி 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து கோப்பைகளை வென்று அசத்தியது, இந்த வருடமும் கோப்பையை வென்றால் வரலாற்றிலேயே ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற புதிய சரித்திரத்தை மும்பை இந்தியன்ஸ் படைக்கும்.

ஆனால் அந்த சாதனையை படைக்கும் அளவிற்கு அந்த அணியின் செயல்பாடுகள் இந்த வருடம் சிறப்பாக இல்லை குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கிய 2வது பாகத்தில் அந்த அணி பங்கேற்ற 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது.

துபாயில் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக வெறும் 111 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை மிகவும் குறைத்துள்ளது.

என்ன காரணம் :

இந்த வருடம் அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், அடம் மில்னே ஆகியோரால் பந்து வீச்சு அபாரமாக உள்ளது.

இருப்பினும் பேட்டிங்கில் ரோகித் சர்மாவை தவிர சூர்யகுமார் யாதவ், இஷான் கிசான் உள்ளிட்ட முக்கியமான பேட்டர்கள் பார்ம் இல்லாமல் தவிப்பது தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.

Rohit Sharma (Photo : BCCI/IPL)


டீ காக், கிரண் பொல்லார்ட் போன்ற அதிரடி வீரர்களும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணிக்கு பின்னடைவை கொடுக்கிறது.

இத்துடன் அந்த அணியின் ஆல் ரவுண்டர்களான பாண்டியா சகோதரர்களுள் பார்ம் இல்லாமல் உள்ளனர்.

என்ன செய்யலாம் :

தற்போதைய நிலைமையில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்:

4 போட்டிகளில் 4 வெற்றிகள் :

இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்ற அந்த அணி எஞ்சியுள்ள இன்னும் 4 போட்டிகளில் பஞ்சாப், டெல்லி, ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக களமிறங்க உள்ளது.

  • இந்த 4 போட்டிகளிலும் தோல்வி அடையாமல் வெற்றிகளை பெற்றால் அந்த அணி எந்தவித சிரமமுமின்றி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம்.

இதற்கு முன் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இதே போன்ற நிலைமையில் கடைசி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று மும்பை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது, எனவே அதே மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா என அந்த அணியின் ரசிகர்கள்  எதிர்பார்க்கிறார்கள்.

4 போட்டிகளில் 3 வெற்றிகள் :

அடுத்த 4 போட்டிகளில் தடுமாறி வரும் பஞ்சாப்,ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளை கூட மும்பை சமாளித்து விடலாம் ஆனால் வலுவாக விளங்கும் டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்துவது சற்று கடினமாகவே இருக்கும்.

  • ஒருவேளை அடுத்த 4 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட 14 புள்ளிகளுடன் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு நெட் ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெற முடியும் ஆனால் அது மற்ற அணிகளின் வெற்றியை சார்ந்து அமைந்திருக்கும்.

தற்போது - 0.551 என்ற நிலையில் அந்த அணியின் ரன் ரேட் உள்ளது என்பதால் 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் அந்த 3 போட்டிகளிலும் மும்பை மிக பெரிய வித்தியாசத்தில் வென்று ரன் ரேட்டை உயர்த்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

ஒருவேளை அடுத்த 4 போட்டிகளில் 2 போட்டிகளில் தோற்றால் மும்பையின் ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பை கனவு தகர்த்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

Previous Post Next Post

Your Reaction