T20 World Cup : என்னை உதவாக்கரை என ஒதுக்கி விட்டார்கள் - இம்ரான் தாஹிர்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடருக்காக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை நேற்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது, அதை கண்ட அந்த நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Mark Boucher, Imran Tahir, Greme Smith (Getty)


காரணம் அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் பப் டு பிளேஸிஸ், நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மற்றும் அனுபவ சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை. இந்த மூவருமே டெஸ்ட், ஒருநாள் போன்ற கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற போதிலும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை, அத்துடன் ஐபில் உட்பட உலகில் நடைபெறும் பல முன்னணி பிரீமியர் லீக் டி20 தொடர்களில் பங்கேற்று இப்போதும்கூட நல்ல பார்மில் உள்ளார்கள்.

குறிப்பாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் சில தினங்களுக்கு முன்பு டு பிளேஸிஸ் சதம் அடித்தார், அதேபோல் இம்ரான் தாகிர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.


ஏமாற்றபட்ட தாஹிர் : இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்க அணியில் தனது பெயர் இடம் பெறாததால் மனமுடைந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஐஓஎல் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,


"அணியில் இடம் பெறாதது எனக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது, கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த உலக கோப்பையில் நீ விளையாட வேண்டும் என கிரேம் ஸ்மித் எனக்கு வாக்களித்திருந்தார். நான் அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன், கண்டிப்பாக விளையாடுவேன் என பதிலளித்தேன்"

"நான் தொடர்ந்து கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் நீங்கள் என்னுடைய ஆட்டத்தை உலகெங்கிலும் நடக்கும் லீ தொடர்களில் பார்க்க முடியும், அதனால்தான் அவர் (ஸ்மித்) என்னை விளையாட வேண்டும் எனக் கூறியதுடன் டு பிளேஸிஸ், ஏபி டிவிலியர்ஸ் போன்ற மேலும் சில வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக என்னிடம் தெரிவித்தார், மேலும் அவர்கள் என்னை தென் ஆப்பிரிக்காவின் குரூப்பில் சேர்த்தார்கள் ஆனால் அதன் பிறகு என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை".

என கொடுத்த வாக்கை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தலைவர் கிரேம் ஸ்மித் காப்பாற்றவில்லை என்று இம்ரான் தாஹிர் மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்தார். 


உதவாக்கரை : புதிதாக பயிற்சியாளராக பொறுப்பேற்ற மார்க் பவுச்சரும் தம்மை கண்டுகொள்ளவில்லை என இம்ரான் தாகிர் கூறுகையில், 


சில மாதங்களுக்குப் பிறகு நான் கிரேம் ஸ்மித் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோருக்கு செய்தி அனுப்பினேன் ஆனால் அவர்கள் எனக்கு பதில் அளிக்கவே இல்லை, மார்க் பவுச்சர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் என்ன திட்டம் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. இதனால் நான் மிகவும் வருத்தமாக உள்ளேன், நான் எனது நாட்டிற்காக 10 வருடங்கள் விளையாடி இருக்கிறேன், என்னை உதவாக்கரை என்று நினைக்கும் இவர்களுக்கு மத்தியில் நான் சிறிய அளவிலான மதிப்பை பெறுவதற்கு உண்டான தகுதியை பெற்றுள்ளேன்


என இம்ரான் தாகிர் மனமுடைந்து பேசினார். தற்போது 42 வயது நிரம்பிய இம்ரான் தாகிர் தென் ஆப்பிரிக்காவுக்கு 38 20 ஓவர் போட்டிகளில் 63 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், இருப்பினும் இதற்காக மனம் தளராமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அடுத்த டி20 உலகக் கோப்பையில் இடம் பிடிப்பேன் எனவும் நம்பிக்கையுடன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Previous Post Next Post

Your Reaction