இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது, டாஸ் தோற்ற பின் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் வெறும் 191 ரன்களுக்கு இந்தியா சுருண்டது.
![]() |
| Team India | Getty |
பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்து இந்தியாவைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் 2வது இன்னிங்சில் ரோகித் சர்மாவின் சதம் மற்றும் இதர பேட்ஸ்மேன்களின் அதிரடியால் இந்தியா 368 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது, அதை துரத்திய இங்கிலாந்து இந்தியாவின் அபாரமான அற்புதமான பந்துவீச்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த வெற்றியின் வாயிலாக 3வது போட்டியில் இங்கிலாந்திடம் பெற்ற தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2 - 1 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. நேற்று பரபரப்பாக நடைபெற்று முடிந்த இப்போட்டியில் நிகழ்ந்த முக்கியமான சில சாதனைகளின் பட்டியல் பற்றி பார்ப்போம் :
1. வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் ஓவல் மைதானத்தில் 50 வருடங்கள் கழித்து இங்கிலாந்தை முதல் முறையாக வீழ்த்திய விராட் கோலி தலைமையிலான இந்தியா சரித்திர வெற்றி பதிவு செய்தது, இதற்கு முன் கடந்த 1971ல் அஜித் வடேகர் தலைமையிலான இந்தியா இந்த மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றது.
2. நேற்றைய வெற்றியுடன் இங்கிலாந்து மண்ணில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய மற்றும் ஆசிய கேப்டன் என்ற பெருமையை 3 வெற்றிகளுடன் விராட் கோலி பெற்றார்.
2 வது இடத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவ், வாசிம் அக்ரம் ஆகியோர் 2 வெற்றிகளுடன் உள்ளார்கள்
3. நேற்றைய கடைசி நாளில் இங்கிலாந்து எதிர்பாரா வண்ணம் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற கபில் தேவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.
- ஜஸ்பிரித் பும்ரா வெறும் 24 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார், இதற்கு முன் கபில்தேவ் 25 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்து இருந்ததே சாதனையாக இருந்தது.
4. இந்த போட்டியில் 127 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 35 முறையாக ஆட்டநாயகன் விருது வென்றார், இதன் வாயிலாக சர்வதேச அளவில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற 4வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
5. இந்த போட்டியுடன் சேர்த்து ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 சதங்களை அடித்துள்ளார், அந்த 8 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100% வெற்றிக்கு சதம் அடித்த வீரர்களின் பட்டியல்:
- ரோஹித் சர்மா - 8 சதங்கள்.
- வார்விக் ஆர்ம்ஸ்ட்ரங் - 6 சதங்கள்.
- டேரன் லீமன் - 5 சதங்கள்.
6. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா தள்ளாடிய போது 57 ரன்கள், 2வது இன்னிங்ஸில் 60 ரன்கள் எடுத்ததுடன் ஜோ ரூட் விக்கெட் உட்பட மொத்தம் 3 விக்கெட்டுகள் எடுத்து ஷார்துல் தாக்கூர் வெற்றிக்கு மிக மிக முக்கிய பங்காற்றினார்.
- இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா வெற்றி பெற்ற ஒரு போட்டியில் 2 அரை சதங்களும், 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
7. முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போதிலும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது, முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு கீழாக அவுட் ஆன போதிலும் இந்தியா வெற்றி பெறும் 2வது வெளிநாட்டு டெஸ்ட் போட்டி இதுவாகும்.
- இதற்கு முன் கடந்த 2018ல் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த போட்டியிலும் இதேபோல் முதல் இன்னிங்சில் 200 க்கு கீழ் சுருண்ட போதிலும் இந்தியா வெற்றி பெற்றது.
8. இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெல்வது இது 2வது முறையாகும்.
- இதற்கு முன் கடந்த 1986ல் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளை வென்ற இந்தியா 2 - 0 என தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
