
இலங்கைக்கு எதிராக நேற்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சூர்யகுமார் யாதவ் 50, ஷிகர் தவான் 46 உதவியால் இலங்கை வெற்றிபெற 165 ரன்கள் இலக்காக எடுத்தது, பின்னர் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்கள், தீபக் சாஹர் 2 விக்கெட்கள் ஆகியோரின் அற்புதமான பந்துவீச்சால் இந்தியா வெற்றி பெற்றது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் 7வது கேப்டனாக பொறுப்பேற்ற ஷிகர் தவான் நேற்று கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தார். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்த 6 கேப்டன்களின் விவரம் பற்றி பார்ப்போம் :
1. வீரேந்திர சேவாக் : கடந்த 2006ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா முதல் முறையாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் களம் இறங்கியது, அப்போட்டிக்கு அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கேப்டன்ஷிப் செய்தார், இந்தப் போட்டியில்தான் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் இந்தியாவிற்காக ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடினார், அந்த போட்டியில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது,மேலும் அப்போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி விகிதம் : 100%.
2. சுரேஷ் ரெய்னா : கடந்த 2010 - 11 ஆகிய காலகட்டங்களில் தோனி கேப்டனாக ஓய்வு எடுத்த 3 போட்டிகளில் இந்தியாவிற்காக சுரேஷ் கேப்டன்ஷிப் செய்துள்ளார், அந்த 3 போட்டிகளிலும் ரெய்னா தலைமையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வெற்றி விகிதம் : 100%.
3. அஜிங்கிய ரகானே : தற்போதைய கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கு முன்பாக இந்தியாவின் கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிங்கிய ரகானே இந்தியாவிற்காக 2 டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், அதில் இந்தியா ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. வெற்றி விகிதம் : 50%.
4. ரோகித் சர்மா : ஐபிஎல் தொடரில் மும்பைக்காக 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா இந்தியாவிற்காக 19 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார், அதில் இந்தியா 15 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் சந்தித்து உள்ளது, குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாகாஸ் கோப்பை, ஆசிய கோப்பைகளை ரோகித் சர்மா கேப்டனாக வென்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும், விராட் கோலிக்கு அடுத்து டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா கேப்டனாக வரவேண்டும் என பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். வெற்றி விகிதம் : 78.94%.
5. விராட் கோலி : தற்போதைய கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்தியா இதுவரை 45 போட்டிகளில் களம் இறங்கி அதில் 27 வெற்றிகளை குவித்துள்ளது, 14 தோல்விகளைச் சந்தித்தது. குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனையும் படைத்தது. வெற்றி விகிதம் : 78.94%.
6. எம்எஸ் தோனி : இந்தியாவிற்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்த நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றவர், மொத்தமாக இவர் 6 உலக கோப்பைகளில் இந்தியாவிற்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். தோனி தலைமையில் இந்தியா 72 டி20 போட்டிகளில் பங்கேற்று வரலாற்றிலேயே அதிக பட்சமாக 41 வெற்றிகளையும் 28 தோல்விகளையும் சந்தித்து உள்ளது. வெற்றி விகிதம் : 59.28%.