IND Vs ENG : 4வது டெஸ்டின் அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் - தாகூர்

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த பரபரப்பான 4வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்தியா மிகச் சிறப்பாக பந்துவீசி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இந்த வெற்றியின் வாயிலாக 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2 - 1 என முன்னிலையும் பெற்றுள்ளது.

Shardhul Thakur | Photo By Getty


இப்போட்டியில் பெற்ற வெற்றியின் வாயிலாக லண்டன் ஓவல் மைதானத்தில் 50 வருடங்களுக்கு பிறகு 2வது முறையாக ஒரு டெஸ்ட் வெற்றியை இந்தியா பதிவு செய்து அசத்தியது. இந்த வரலாற்று வெற்றிக்கு 2வது இன்னிங்சில் சதம் அடித்து 127 ரன்கள் விளாசி வித்திட்ட ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.


ரோஹித் சர்மா மட்டுமல்லாது இப்போட்டியில் விராட் கோலி, ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா உட்பட பல நட்சத்திரங்கள் சிறப்பாக விளையாடினார்கள். இருப்பினும் இந்த போட்டியின் அறிவிக்கப்படாத ஆட்ட நாயகன் என சார்துல் தாகூரை கூறுவதற்கான 5 காரணங்கள்:

1. 57 ரன்கள் : டாஸ் தோற்ற பிறகு இங்கிலாந்தின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய டாப் பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாகி வந்தார்கள், ஓரளவு தாக்குப்பிடித்து கேப்டன் விராட் கோலி 50 ரன்களில் அவுட் ஆக ஒரு கட்டத்தில் இந்தியா 127/7 என திணறியது.

அப்போது களம் இறங்கிய தாகூர் அதே மைதானத்தில் அதே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சரவெடியாக பேட் செய்து வெறும் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் குவித்தார், இதன் காரணமாக முதல் இனிங்ஸில் 191 என்ற ஓரளவு சுமாரான இலக்கை இந்தியா பெற்றது.

  • மேலும் அந்த இன்னிங்சில் வெறும் 31 பந்துகளில் அரைசதம் அடித்த தாகூர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் அதிவேகமாக அரைசதம் அடித்த பேட்ஸ்மென் என்ற சூப்பர் சாதனையையும் படைத்தார்.

2. காலியான போப் : இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் உமேஷ் யாதவ் பந்தில் 21 ரன்களில் போல்டானார்.

இதர இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் ஓரளவு படுத்தினாலும் ஓலி போப் சிறப்பாக பேட்டிங் செய்து இங்கிலாந்தை முன்னிலை படுத்தினார், தொடர்ந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுத்து அவரை 81 ரன்களில் தாகூர் அவுட் செய்தார், இதன் காரணமாக இங்கிலாந்தின் முன்னிலை 99 ரன்களுடன் நின்றது.


3. 60 ரன்கள் : 2வது இன்னிங்சில் ரோகித் சர்மா சதம் அடித்து அற்புதமான அடித்தளம் இட்டார், இதர பேட்ஸ்மேன்களும் கணிசமான ரன்கள் குவிக்க இந்தியா வலுவான நிலையை எட்டியது.

அவ்வேளயில் மீண்டும் 2வது இன்னிங்சில் அபாரமாக பேட்டிங் செய்த தாகூர் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 60 ரன்கள் குவித்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார்.

4. உடைந்த ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் :

368 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர்கள் ஹமீது மற்றும் பர்ன்ஸ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து 4வது நாள் முடிவு வரை அவுட்டாகாமல் வெற்றிக்கான நல்ல அடித்தளம் இட்டனர்.

நேற்றைய கடைசி நாளில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது, இதனால் இந்தியாவின் வெற்றி பறிபோய்விடுமோ என்று இந்திய ரசிகர்கள் அஞ்சிய வேளையில் பர்ன்ஸை 50 ரன்களில் அவுட் செய்த ஷர்துல் தாகூர் அந்த ஜோடியை பிரித்தார்.

5. கேப்டன் ஜோ ரூட் : முதல் விக்கெட்டை பெற்ற புத்துணர்ச்சியால் இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய தொடங்கினார்கள், அந்த வேலையில் இந்த தொடரில் இதுவரை 3 சதங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இங்கிலாந்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை 36 ரன்களில் ஷர்துல் தாகூர் போல்ட் ஆக்கிய காரணத்தால் இந்தியாவின் வெற்றி முழுக்க முழுக்க உறுதியானது.

இப்படி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட "ஷார்துல் தாகூர் ஆட்டநாயகன் விருது வெல்வதற்கு தகுதியானவர்" என்று நேற்றைய போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருது வென்ற ரோகித் சர்மா வெளிப்படையாக தெரிவித்து தனது பெருந்தன்மையை காட்டினார்.

Previous Post Next Post

Your Reaction