கிரிக்கெட்டின் பவர்ஹவுஸ் இந்தியா, விராட் கோலி நீண்டகாலம் விளையாட வேண்டும் - ஷேன் வார்னே

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்த வெற்றியின் வாயிலாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 - 1 என முன்னிலை பெற்றுள்ளது, இந்த தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்தியா தோற்கடித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

Photo By Getty & SKY Sports


போராடும் குணம் : வரலாற்றில் இல்லாத அளவுக்கு எந்த ஒரு மோசமான நிலையில் இருந்தாலும் கூட அதிலிருந்து மீண்டு வந்து போராடி வெற்றி பெறும் தன்மையை இந்தியா பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக இந்த தொடரின் 2வது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 3-வது போட்டியில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இன்னும் சொல்லப்போனால் 4வது போட்டியின் முதல் இன்னிங்சில் கூட 191 ரன்களுக்கு சுருண்ட போதிலும் 2வது இன்னிங்சில் மீண்டெழுந்து வந்து 466 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.


வெற்றிநடை : சமீப கலங்கலாக உலக அளவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அதிக வெற்றிகளை குவித்து வருகிறது, அணியில் காயம் காரணமாக முக்கியமான நட்சத்திர வீரர்களும் சீனியர் வீரர்களும் விலகினாலும் கூட இளம் வீரர்களை வைத்து இந்தியா வெற்றியை சாதித்து காட்டி வருகிறது.


பவர்ஹவுஸ் இந்தியா : 

இந்நிலையில் உலக அளவில் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணியாக தற்போதைய இந்திய அணி உருவெடுத்துள்ளது என ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர்,


"என்னை பொறுத்தவரை "விராட் கோலிக்கு நன்றி" என நாம் அனைவரும் கூற வேண்டும் என நினைக்கிறேன், ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னிலை கொடுத்து அதை விரும்புகிறார். இந்தியா உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய பவர் ஹவுஸ், உலகின் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டராக இருக்கும் விராட் கோலி எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் முக்கியம் என கூறுகிறார், டெஸ்ட் கிரிக்கெட் நீடுழி வாழ்க, விராட் கோலி நீங்கள் நீண்ட காலம் விளையாட வேண்டும்"


என கூறிய வார்னே டி20 கிரிக்கெட் வளர்ந்து வரும் இந்த காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.


எங்கும் வெற்றி : ஆஸ்திரேலியாவில் 71 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை வென்றது, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரை வெல்லும் தருவாயில் உள்ளது. இது பற்றி வார்னே,


"பந்து சுழக்கக்கூடிய இந்தியாவில் எங்களால் வெற்றி பெற முடியும், பவுன்ஸ் ஆகக்கூடிய ஆஸ்திரேலியாவிலும் வெற்றி பெற முடியும், வேகம் மற்றும் ஸ்விங் ஆகக்கூடிய இங்கிலாந்திலும் வெற்றி பெற முடியும் என விராட் கோலி கூறுகிறார்"அணியை விராட் கோலி வழி நடத்தும் விதம் தான் இதற்கு காரணம், அணியில் உள்ள வீரர்களுக்கு நம்மால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். எந்த ஒரு விளையாட்டிலும் நம்பிக்கை தான் மிகவும் முக்கியம், நீங்கள் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது".


"தனது அணி வீரர்களிடையே வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை விராட் கோலி ஆழமாக ஏற்படுத்தி உள்ளார், மேலும் அணியில் உள்ள அனைவரையும் அவர் மதித்து ஆதரவு கொடுக்கிறார், எனவே அவர்கள் கேப்டனுக்காக விளையாடுகிறார்கள், ஒரு கேப்டனாக அணி வீரர்கள் உங்களுக்கு விளையாடுகிறார்கள் என்பது மிகவும் முக்கியம்"


என கூறிய அவர் எந்த ஒரு கால சூழ்நிலையிலும் எந்த ஒரு நிலைமையிலும் கண்டிப்பாக நம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அணியில் ஆழமாக விதைத்துள்ளதே விராட் கோலி தலைமையிலான இந்தியாவின் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார்.

Previous Post Next Post

Your Reaction