ஐபிஎல் 2021 எஞ்சிய தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்குகிறது, இன்று துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன, நட்சத்திர வீரர்கள் அடங்கிய இவ்விரு அணிகள் மோதும் இந்தப் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
![]() |
Rohit Sharma | MS Dhoni by IPL T20 |
ஐபிஎல் வரலாற்றில் இந்த 2 அணிகளும் மற்ற அணிகளை காட்டிலும் மிகவும் வலுவான அணிகளாகும் ஏனெனில் இந்த 2 அணிகள் தான் வரலாற்றிலேயே அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளன. இந்த அணிகள் இந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்க அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் தான் முக்கிய தூண்களாக இருக்கின்றனர் என்று கூறினால் மிகையாகாது.
இந்த 2 ஜாம்பவான்கள் இன்று எதிரெதிர் அணியில் மோத உள்ளதை முன்னிட்டு இவ்விரு கேப்டன்களின் புள்ளி விவரங்கள் பற்றி பார்ப்போம்:
![]() |
1. அதிக கோப்பைகள் :
ரோஹித் சர்மா : கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பை அணிக்காக கேப்டனாக ரோகித் சர்மா சாம்பியன் பட்டம் வென்றார். பின் 2015, 2017, 2019 என அடுத்த 5 தொடர்களில் 3 கோப்பைகளை வென்ற அவர் கடைசியாக நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வென்று 5 கோப்பைகளுடன் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.
- இந்த 2021 தொடரிலும் அவர் கோப்பையை வெல்லும் பட்சத்தில் வரலாற்றிலேயே ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற சரித்திரம் படைப்பார்.
எம்எஸ் தோனி : மறுபுறம் 2008 முதல் சென்னை அணிக்காக கேப்டன்ஷிப் செய்து வரும் தோனி 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் 2வது வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார், மேலும் வரலாற்றில் அதிக ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடிய கேப்டன் என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரர் ஆவார்.
2. வெற்றி விகிதம் :
எம்எஸ் தோனி : சென்னை அணிக்காக வரலாற்றில் 195 போட்டிகளில் எம்எஸ் தோனி கேப்டன்ஷிப் செய்து அதில் 115 வெற்றிகளை பெற்றுள்ளார்.
வெற்றி விகிதம் : 59.00%.
- ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி அவார்
ரோஹித் சர்மா : ரோகித் சர்மா 123 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டன்ஷிப் செய்து அதில் 72 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
வெற்றி சதவிகிதம் : 58.5%.
எனவே வெற்றி சதவிகித அடிப்படையில் எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டனாக உள்ளார்.
3. அதிக ரன்கள் :
கேப்டனாக இருப்பவர் பேட்ஸ்மேனாக இருக்கும் பட்சத்தில் எந்த அளவுக்கு ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தருகிறார் என்பதும் முக்கியமான அம்சமாகும்.
அந்த வகையில் எம்எஸ் தோனி 171 இன்னிங்ஸ்களில் 4379 ரன்களை 41.70 என்ற சிறப்பான சராசரியில் குவித்து அசத்தியுள்ளார்.
மறுபுறம் ரோகித் சர்மா 122 இன்னிங்ஸ்களில் 3275 ரன்களை 30.60 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
எனவே ரன்கள் அடிப்படையில் ரோகித் சர்மாவை விட எம்எஸ் தோனி சிறந்த கேப்டனாக ஐபிஎல் தொடரில் செயல்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.