RCB vs CSK : சென்னையின் வெற்றிப்பயணம் தொடருமா - முழுவிவரம்

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது.

Virat Kohli | MS Dhoni (Photo : BCCI/IPL)


இந்தியாவின் 2 நட்சத்திர கேப்டன்களான இவர்கள் இருவரும் தலைமை தாங்கும் இந்த 2 அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது, அதேபோல் இந்த 2 அணி ரசிகர்களும் போட்டியின் போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது அதைவிட பரபரப்பாக காணப்படும்.

போட்டி விவரம் :

செப்டம்பர் 24, போட்டி 35, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ், இரவு 7.30 மணி, ஷார்ஜா.

நேரடி ஒளிபரப்பு : 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஆப்.

முன்னோட்டம் :

ஐபிஎல் 2021 தொடரின் முதல் பகுதியில் வெற்றிகரமாக விளையாடிய பெங்களூரு 2வது பகுதியின் முதல் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது.

தற்போது 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இப்போட்டி உட்பட இனி வரும் போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற கேப்டன் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல் என அந்த அணி நட்சத்திரங்கள் சிறப்பாக ரன்கள் குவிக்க அவசியம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம் துபாயில் நடைபெற்ற போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

குறிப்பாக அந்த போட்டியில் 24/4 என பேட்டிங் செய்யும்போது பவர் பிளேயில் தடுமாறிய அந்த அணி இறுதியில் போராடி வெற்றி பெற்ற விதம் அந்த அணி வீரர்களிடையே பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே புத்துணர்ச்சியுடன் பெங்களூருவை சந்திக்க அந்த அணி தயாராகியுள்ளது.

புள்ளிவிவரம் :

வரலாற்றில் இந்த 2 அணிகளும் இதுவரை மொத்தம் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன.

  • அதில் சென்னை 18 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது பெங்களூரு 9 முறை மட்டுமே வென்றுள்ளது, 1 போட்டி முடிவின்றி போனது.
  • கடைசியாக இந்த 2 அணிகள் மோதிய 5 போட்டிகளில் சென்னை 3 முறையும் பெங்களூரு 2 முறையும் வென்றுள்ளன.

போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளது.

சார்ஜா மைதானத்தில் முதல் முறையாக இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  • கடைசியாக இந்த 2 அணிகள் மோதிய போட்டியில் சென்னை 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிட்ச் ரிப்போர்ட் :

போட்டி நடைபெறும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது, மேலும் இந்த மைதானம் அளவில் சிறியது என்பதால் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவார்கள்.

தவறாக பந்துவீசும் பவுலர்களுக்கு கண்டிப்பாக இங்கு தண்டனை உள்ளது, இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் உதவியுடன் விக்கெட் கிடைக்கலாம்.

திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் தைரியத்துடன் பந்துவீசினால் விக்கெட்டுகளையும் எடுக்கலாம்.

இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 170 ஆகும், இருப்பினும் 200 ரன்கள் அடித்தால் கூட நிம்மதியாக இருக்க முடியாது.

  • இங்கு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 56 போட்டிகளில் 19 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.
  • 36 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன, 1 போட்டி முடிவின்றி போனது.

எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது நல்லது.

உத்தேச அணிகள் :

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங்கில் சொதப்பியது, எனவே சிங்கப்பூரைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் டிம் டேவிட் அணியில் சேர்க்கப் படலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :

தேவூத் படிக்கல், கேஎஸ் பரத் (கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஏபி டீ வில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட்/சச்சின் பேபி, வணிந்து ஹஸரங்கா, ஹர்ஷல் படேல், யுஸ்வென்ற சஹால், முகமத் சிராஜ், கைல் ஜேமிசன்/நவதீப் சைனி

சென்னையை பொருத்தவரை ருத்ராஜ் சிறப்பான ஆட்டத்தால் கடைசி போட்டியில் தப்பிப் பிழைத்தது, அதைக் கருத்தில் கொண்டு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அந்த பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆட வேண்டியுள்ளது. ஆல் ரவுண்டர் சாம் கரன் அணியில் சேர்க்கப்படுவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

பப் டு பிளெஸ்ஸிஸ், ருதுராஜ் கைக்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன் & கீப்பர்), அம்படி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சம் கரன், ட்வயன் ப்ராவோ, தீபக் சஹர், ஷர்டுல் தாகூர்.

Previous Post Next Post

Your Reaction