இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் வரும் 2021 டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது.
![]() |
Ravi Shastri | MS Dhoni | Virat Kohli (Getty) |
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி முதல் முறையாக நியமிக்கப்பட்டார், பின் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பைக்கு பின் அவரின் பதவிக் காலம் 2021 வரை மேலும் 2 வருடங்கள் நீட்டிக்கப்பட்டது.
சாதித்துவிட்டேன் :
பயிற்சியாளராக தனது கடைசி தொடரான வரும் 2021 டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதிலும் ஏற்கனவே பயிற்சியாளராக நிறைய சாதித்து விட்டதாக ரவி சாஸ்திரி பெருமையுடன் கூறுகிறார். இதுபற்றி "தி கார்டியன்" பத்திரிகையில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
"நான் நினைத்ததை சாதித்து விட்டதாக நம்புகிறேன், 5 வருடங்களாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்தோம். ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து 2 டெஸ்ட் தொடர்களையும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரையும் வெற்றி பெற்றுள்ளோம்"
![]() |
Team India (Getty) |
"இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டனிடம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் தூங்குவதற்கு முன்பாக, "என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் வீழ்த்துவதும் இங்கிலாந்தை இங்கிலாந்தில் வீழ்த்துவதும் மிகப்பெரிய இலக்கு" என கூறினேன், குறிப்பாக லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானத்தில் நாங்கள் விளையாடி தொடரில் 2 - 1 என முன்னிலை பெற்ற விதம் மிகவும் சிறப்பானது"
என கூறினார். ரவிசாஸ்திரி பயிற்சியாராக பொறுப்பு வகித்த கால கட்டங்களில் அவர் கூறியது போல டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளை பெற்று உலகின் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது.
டி20 வெற்றிகள் :
அத்துடன் அவரின் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் இந்தியா முதல் முறையாக டி20 தொடரையும் வென்றது. இதுபற்றி அவர்,
"வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நாங்கள் எதிரணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி உள்ளோம், ஒருவேளை டி20 உலகக் கோப்பையை வென்றால் அது எனது பயணத்தில் மேலும் ஒரு அழகை சேர்க்கும், வேறு ஒன்றும் சாதிப்பதற்கு இல்லை"
என கூறிய அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் டெஸ்ட் தொடரை வென்றதால் அனைத்தையும் சாதித்ததாக உணர்வதாகவும் இனியும் பயிற்சியாளர் பதவியில் தொடர விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
டி20 உலககோப்பை :
தனது கடைசி தொடரான 2021 டி20 உலகக்கோப்பை பற்றி அவர்,
"இந்த உலக கோப்பையில் எங்களால் முடிந்த அனைத்தையும் கண்டிப்பாக கொடுக்க உள்ளோம், முழு திறமையுடன் விளையாடினால் வெற்றி பெறும் அணியை நாங்கள் பெற்றுள்ளதால் மகிழ்ச்சியாக எதிர்கொள்ள உள்ளோம். நிறைய மிகப்பெரிய வீரர்களுடன் நான் சேர்ந்து வேலை செய்துளளதால் இந்த பதவியில் இருந்து விலகுவது வருத்தத்தை அளிக்கிறது, அணியில் மிகச் சிறப்பான தருணங்களை சந்தித்தோம் ஆனாலும் நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டின் தரம் மற்றும் முடிவுகள் ஆகியவை எனது பயணத்தை மகிழ்ச்சி ஆக்குகிறது"
என கூறினார். இருப்பினும் ரவிசாஸ்திரி தலைமையில் 2019 உலக கோப்பை 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் இந்தியா படு மோசமாக தோற்றது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்பிரித் பும்ரா :
இன்று இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பவுலராக வலம் வரும் ஜஸ்பிரித் பும்ரா ரவிசாஸ்திரி தலைமையிலான அணியில் தான் அறிமுகமானார். அவருக்கான வாய்ப்பு வழங்கியது பற்றி,
"ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார் என யாரும் நம்பவில்லை ஆனால் நான் பயிற்சியாளராக பொறுப்பேற்ற போது வெளிநாடுகளில் "எவ்வாறு 20 விக்கெட்டுகள் எடுக்க முடியும் என என்னை நானே கேட்டுக்கொண்டேன்", அதற்கு 4 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என எனக்கு தெரியும் ஏனெனில் நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நிறைய விளையாடி உள்ளேன்".
![]() |
Jasprit Bumrah (Getty Images) |
"2018இல் தென்ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரை 2 - 1 என தோற்ற போதிலும் பும்ராவை நாங்கள் கண்டுபிடித்தோம், டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா என்ற யோசனையை ஒரு மாதத்திற்கு முன்பே விராட் கோலியிடம் நான் தெரிவித்தேன், அத்துடன் பும்ராவை கேப் டவுன் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்த உலகம் பார்க்க கூடாது என்பதற்காக இந்தியாவில் அவரை பயன்படுத்த வேண்டாம் என தேர்வு குழுவினரிடம் கூறியிருந்தேன், அப்போது முதல் தற்போது வரை பும்ரா 101 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், அது மிகவும் சிறப்பானது".
என கூறிய ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தாம் மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாக தெரிவித்தார்.