T20 World Cup 2021 : ரவிச்சந்திரன் அஷ்வின் தேர்வின் பின்னணியில் ரோஹித் சர்மா

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது, இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியை நேற்று முன்தினம் மும்பையில் பிசிசிஐ அறிவித்தது.

Rohit Sharma and Ravichandran Ashwin(AFP) 

இதில் யாரும் எதிர்பாரா வண்ணம் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார், கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் அவர் இந்தியாவுக்காக விளையாட இருந்தார்.


முடிந்த கதை : கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்தியாவின் முன்னணி சுழல் பந்துவீச்சாளாராக இருந்த அஸ்வின் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார்.

கடந்த வருடம் "அஸ்வின் இனி இந்தியாவின் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடுவாரா" என்ற கேள்விக்கு கேப்டன் விராட் கோலி "யாருக்கு பதில் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என நீங்களே சொல்லுங்கள்" என செய்தியாளர்களிடம் பதில் கேள்வி கேட்டார்.

அத்துடன் இதர சுழல் பந்துவீச்சாளர்கள் தடுமாறினால் மட்டுமே அவருக்கான வாய்ப்பு பற்றி யோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார், இதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அஷ்வின் கதை முடிந்து விட்டது என இந்திய ரசிகர்கள் நினைத்து வந்தனர். 


பின்னணியில் ரோஹித் : 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வில் துணை கேப்டன் ரோகித் சர்மா மிகப் பெரிய பங்காற்றியுள்ளார், ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றதே இதற்கு காரணமாக அமைந்ததாக தெரிகிறது.

இதை தொடர்ந்து நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் அஸ்வினை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது பற்றி ரோஹித் சர்மாவிடம் கேட்க அவரும் அந்த முடிவுக்கு மிகப் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார், கேப்டன் விராட் கோலியும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே ரவிச்சந்திரன் அஸ்வின் 4 வருடங்கள் கழித்து அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


காரணம் : 2017க்கு பின் இந்திய வெள்ளை பந்து அணிக்காக விளையாடாத போதிலும் ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வந்தார், மேலும் இந்த உலகக் கோப்பை நடைபெற இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் சுழல் பந்துவீச்சு எடுபடும் என்ற காரணத்தாலும் அஷ்வின் உட்பட 5 சுழல் பந்துவீச்சாளர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அஷ்வின் - ஜடேஜா ஜோடி : அஷ்வின் போலவே இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட மற்றொரு நட்சத்திர அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது காயமடைந்த ஒரு வீரருக்கு பதிலாக பாதியில் தேர்வு செய்யப்பட்டார், அதற்கும் அந்த ஆசிய கோப்பை இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக இருந்த ரோகித் சர்மா முக்கிய பங்காற்றினார்.

எப்படியோ ரோகித் சர்மாவின் முயற்சியால் நீண்ட வருடங்களுக்குப் பின்பு நட்சத்திர சுழல் பந்துவீச்சு ஜோடியான ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் விளையாட உள்ளார்கள்.


மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் : இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு இடத்துக்கு 2, 3 வீரர் என்று வரும்போது 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பையில் விளையாடும் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

எடுத்துகாட்டாக ஷிகர் தவான், பிரிதிவி ஷா, இஷான் கிசான் என வரும் போது இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஹால், குல்தீப், ராகுல் சஹர் என வரும்போது ராகுல் சஹர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Previous Post Next Post

Your Reaction