டெஸ்ட் கிரிக்கெட்டில் நனவான ரோஹித் சர்மா கனவு

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் இந்தியா 2 - 1 என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது, இந்த தொடரில் பேட்டிங் துறையில் இந்தியாவின் விராட் கோலி உட்பட முக்கியமான பேட்ஸ்மேன்கள் பார்ம் இல்லாமல் தவித்து வரும் வேளையிலும் இந்த தொடர் தொடங்கிய முதல் போட்டியில் இருந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார்.

Rohit Sharma at Oval | Getty Images


குறிப்பாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தடுமாறியது, இருப்பினும் 2வது இன்னிங்சில் ரோகித் சர்மா அபாரமாக பேட்டிங் செய்து வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் சதம் அடித்து 127 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார், இதன் காரணமாக அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.


நங்கூரமிடும் ரோஹித் : பொதுவாக இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெற்றிக்கு ஓபனிங் பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியமாகும், அது கடந்த சில தொடர்களில் சரிவர அமையாத காரணத்தால் இந்தியா தோற்றது ஆனால் இந்த முறை ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்து வருவதால் இந்தியா இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


சரிபட்டு வரமாட்டார் : ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் உட்பட பல உலக சாதனைகளை படைத்து தன்னை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா ஏற்கனவே நிரூபித்தவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 8 வருடங்களாக விளையாடிய போதிலும் பெரிய அளவில் சோபிக்காத அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்திய காரணத்தால் 2019 முதல் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று பலரும் கூறி வந்த நிலையில் 2வது முறையாக பெற்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டார்.

ஓவல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை 7 சதங்களை சொந்த மண்ணில் மட்டுமே அடித்த அவரின் முன் "வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் சதம் விளாச முடியுமா" என்ற ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது.

இத்தனைக்கும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 5 சதங்கள் விளாசி அசத்தியவர்.


விமர்சன கனவு : இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நிக் காம்டன் உட்பட சிலர் வெளிநாட்டு மண்ணில் ஒருநாள் சதம் அடித்தால் போதாது டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்க வேண்டும் என்ற விமர்சனத்தை ரோகித் சர்மாவுக்கு எதிராக கிளப்பினார்கள்.

இப்படி அடுத்தடுத்த விமர்சனங்களால் ஆசியாவுக்கு வெளியே நடைபெறும் ஒரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் சதம் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே ரோகித் சர்மாவின் டெஸ்ட் கனவாக இருந்தது எனக் கூறலாம்.


நனவான கனவு : அதற்காக வழக்கமாக விளையாடும் தனது பாணியை மாற்றி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் பொறுமையாக விளையாடி நல்ல தொடக்கத்தை பெற்றபோதிலும் சதம் அடிக்க முடியவில்லை.


இருப்பினும் இந்த இங்கிலாந்து தொடரில் ரோகித் இதுவரை 8 இன்னிங்சில் களமிறங்கியுள்ளார், அதில் 5 முறை 100 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார்.

  1. நாட்டிங்காம் - 107 பந்துகள்.
  2. லார்ட்ஸ் - 105 பந்துகள்.
  3. லார்ட்ஸ் - 126 பந்துகள்.
  4. ஓவல் - 156 பந்துகள்.
  5. ஓவல் 256 பந்துகள்.


மொத்தமாக 866 பந்துகள் சந்தித்து 368 ரன்களை எடுத்து ஓவல் டெஸ்டில் சதமும் அடித்து தனது நீண்ட கால டெஸ்ட் கிரிக்கெட் கனவை நிஜமாக்கி உள்ளார், 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை இந்தியா கைப்பற்றினால் அவரின் அந்த கனவு இன்னும் முழுமையாக நினவாகி விடும், இதன் வாயிலாக அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.


அடுத்த கனவு : 5 ஐபிஎல் கோப்பைகள், 2013 சாம்பியன்ஸ் கோப்பை உட்பட பல இலக்குகளை ரோகித் சர்மா இதுவரையிலான தனது கிரிக்கெட் வாழ்வில் எட்டிப் பிடித்து உள்ளார்.

இந்தியாவிற்க்காக 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரோகித் சர்மாவின் அடுத்த கனவாக இருக்கும் என்பதில் சதேகமில்லை. 

Previous Post Next Post

Your Reaction