ஐபிஎல் 2021 தொடரில் நேற்று நடைபெற்ற 33வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
![]() |
Delhi Capitals | Sun Raisera Hyderabad (Pic : BCCI/IPL) |
முன்னதாக துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து டெல்லியின் அபார பந்துவீச்சில் 20 ஓவர்களில் வெறும் 134/9 ரன்கள் மட்டுமே எடுத்தது, அந்த அணியின் நட்சத்திரங்கள் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் என யாருமே பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறினார்கள்.
டெல்லி அபார வெற்றி :
டெல்லி சார்பில் 145 கிலோ மீட்டருக்கு மேல் தொடர்ந்து பந்துவீசிய அன்றிச் நோர்ட்ஜெ 2 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர், பின்னர் 135 என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஷ்ரேயஸ் ஐயர் 41*, தவான் 42, கேப்டன் பண்ட் 35* ரன்களும் எடுக்க 17.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் வாயிலாக டெல்லி கேப்பிடல் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. பரிதாபமாக தோற்ற ஐதராபாத் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது.
இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகளை பற்றி பார்ப்போம்:
1. நேற்றைய போட்டியில் 37 பந்துகளில் 42 ரன்கள் விளாசிய டெல்லியின் ஷிகர் தவான் 2021 ஐபிஎல் தொடரில் 400 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேனாக அசத்தினார்.
- இதுவரை இந்த தொடரில் 422 ரன்கள் குவித்த அவர் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார், 2வது இடத்தில் கேஎல் ராகுல் 380 ரன்களுடன் உள்ளார்.
2. ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிகமுறை 400 ரன்கள் குவித்த 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் தவான் இதுவரை 8 சீசனில் 400+ ரன்களை குவித்துள்ளார், இவருக்கு முன்பாக சுரேஷ் ரெய்னா 9 முறை 400 ரன்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார்.
3. கடந்த 2019, 2020, 2021 என கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ள தவான் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 3 சீசனில் 400 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
4. நேற்றைய போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்தது 41 பந்துகளில் 47* ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட டெல்லி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்தார்.
- மொத்தமாக அவர் டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடக்கும் 18வது இந்திய பேட்டர் ஆவார்.
5. நேற்றைய போட்டியில் முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த அணி அதிகபட்சமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
6. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரித்திமான் சாஹா ஐபிஎல் போட்டிகளில் 2000 ரன்களை கடந்தார்.
7. நேற்று எதிர்பாரா வண்ணம் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன ஹைதராபாத் நட்சத்திரம் டேவிட் வார்னர் கடந்த 2016 க்குப் பின் முதல் முறையாக ஒரு ஐபிஎல் போட்டியில் டக் அவுட்டானார்.
8. இதுவரை பங்கேற்ற முதல் 8 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் 8 போட்டிகளில் 7 தோல்விகளை பெற்ற 5வது அணி என்ற மோசமான பெருமையை ஹைதராபாத் நேற்று அடைந்தது.