டெஸ்ட் சாம்பியன்னா சும்மாவா, கான்பூர் டெஸ்டை ட்ரா செய்த நியூஸிலாந்து படைத்த வரலாற்று சாதனை இதோ

கான்பூரில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி துவங்கிய இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வெற்றி பெற விடாமல் நியூசிலாந்து டிரா செய்தது.

Photo Credits : Getty Images


முன்னதாக கான்பூரில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 345 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக போட்டியிலேயே 105 ரன்கள் எடுத்து அசத்தினார்.

நியூஸிலாந்து பதிலடி:

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்துக்கு லாதம் 95 ரன்களும், வில் எங் 89 ரன்களும் குவிக்க முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் குவிக்க இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது ஆனால் அப்போது சுதாரித்த இந்திய பவுலர்கள் அடுத்து வந்த பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்து அந்த அணியை வெறும் 296 ரன்களுக்கு சுருட்டினர்.

இதன் காரணமாக 49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவை 2வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 51/5 என நியூசிலாந்து கட்டுப்படுத்தியது இருப்பினும் முதல் இன்னிங்ஸ் போல மீண்டும் சரிவில் இருந்து மீட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்கள் சஹா 61* ரன்களும் எடுக்க 234/7 ரன்களில் டிக்ளேர் செய்து நியூசிலாந்துக்கு 284 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ட்ராவில் முடிவு:

இதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 4வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழந்தாலும் நேற்று நடைபெற்ற 5வது நாளில் உணவு இடைவேளை வரை அந்த அணி விக்கெட் இழக்காமல் பேட்டிங் செய்தது.

இருப்பினும் அதன்பின் கேன் வில்லியம்சன் உட்பட முக்கிய வீரர்களை இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து அவுட் செய்ததால் இந்தியாவின் வெற்றி உறுதியானது ஆனால் கடைசி கட்ட பரபரப்பான நேரத்தில் கடைசி 1 மணி நேரத்தில் 1 விக்கெட் மட்டுமே தேவைப்படும் நிலையில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜஸ் படேல் இந்தியாவின் வெற்றியை தடுத்து நிறுத்தி போட்டியை டிரா செய்தனர்.

டெஸ்ட் சாம்பியன்:

சொந்த மண்ணில் மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் வெறும் ஒரு விக்கெட் எடுக்க முடியாத காரணத்தால் வெற்றியை நூலிழையில் தவற விட்ட இந்தியா ஏமாற்றத்துடன் போட்டியை முடித்தது.

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம், தற்போது அதுபோலவே இந்தப் போட்டியிலும் கையில் கிடைத்த வெற்றியை மீண்டும் இந்தியாவை ருசிக்க விடாமல் நியூசிலாந்து தன்னை ஒரு டெஸ்ட் சாம்பியன் என நிரூபித்துள்ளது என்றே கூறலாம்.

வரலாறு படைத்த நியூஸிலாந்து:

கான்பூர் டெஸ்ட் போட்டியை டிரா செய்ததன் வாயிலாக நியூஸிலாந்து தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தோல்வியே அடையாமல் தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாடி புதிய வரலாறு படைத்துள்ளது இதில் இந்த வெற்றி நடை இந்தியாவிற்கு எதிராக துவஙகியது என்பது மீண்டும் ஒரு ஆச்சரியமாகும்.

ஆம் கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து 2 - 0 என கைப்பற்றியது.

  • அப்போது முதல் தற்போது வரை 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து 8 வெற்றிகளை பெற்றுள்ளது, 2 போட்டிகளை டிரா செய்தது, 1 போட்டியில் கூட தோற்கவில்லை.

இந்திய மண்ணில் நியூஸிலாந்து:

அத்துடன் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக 11 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து டிரா செய்துள்ளது.

அதேபோல் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 14 டெஸ்ட் போட்டிகளுக்கு பின் முதல் முறையாக வெற்றி பெற விடாமல் நேற்றைய போட்டியை நியூசிலாந்து டிரா செய்தது.

  • கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது, அதன் பின் சொந்த மண்ணில் தொடர்ந்து 14 வெற்றிகளைப் பெற்று வந்த இந்தியா தற்போதுதான் முதல் முறையாக டிராவை சந்தித்துள்ளது.

அதேபோல் கடந்த 1978 க்கு பின் முதல் முறையாக சொந்த மண்ணில் வெற்றிக்காக வெறும் 1 விக்கெட் மட்டுமே தேவைப்பட்ட போது அதை எடுக்க முடியாமல் இந்தியா ட்ரா செய்துள்ளது.

  • கடைசியாக கடந்த 1978 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் தான் இதே போல ஒரு விக்கெட் எடுக்க முடியாமல் நூலிழையில் இந்தியா போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction