தனிமரம் தோப்பாகுமா ! நிரூபித்த ஜோ ரூட்டின் பரிதாப இங்கிலாந்து மோசமான உலகசாதனைகள்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஆஷஸ் கிரிக்கெட் கோப்பை 2021/22 தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் 3 - 0 என முன்னிலை பெற்றுள்ளதுடன் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி தக்க வைத்துக் கொண்டது.

Photo Credits : Getty Images


முன்னதாக கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரில் பிரிஸ்பேன் நகரில் நடந்த முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது, பின்னர் அடிலெய்ட் நகரில் நடந்த 2வது போட்டியில் ஒரு படி மேலே போய் 275 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது.

படுதோல்வி:

இதை அடுத்து டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மீண்டும் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

இந்த அடுத்தடுத்த தோல்விகளின் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான உலக சாதனையை வங்கதேசத்துடன் இங்கிலாந்து பகிர்ந்து கொண்டுள்ளது.

  • வங்கதேசம் - 9 தோல்விகள் (2003)
  • இங்கிலாந்து - 9 தோல்விகள் (2021)*

ஆஸ்திரேலியாவில் திணறல்:

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மண்ணில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான உலக சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

  • கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற அந்த அணி அதன்பின் கடந்த 10 வருடங்களாக 13 போட்டிகளில் தோல்வியடைந்து இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது.

தனி மரம் ஜோ ரூட்:

இந்த 2021இல் அந்த அணி களம் இறங்கிய 15 டெஸ்ட் போட்டிகளில் 9 தோல்விகளை இங்கிலாந்து சந்தித்துள்ளது, இத்தனை படுதோல்விகளுக்கும் காரணம் அந்த அணியின் படுமோசமான பேட்டிங் என்றே கூற வேண்டும்.

"கேப்டன் லீடிங் பிரம் தி பிரன்ட்" என ஆங்கிலத்தில் கூறுவது போல இந்த வருடம் முழுவதும் இங்கிலாந்தின் பேட்டிங்கில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் தனி ஒருவனாக ஒவ்வொரு போட்டியிலும் நங்கூரமாக விளையாடி மிகப்பெரிய ரன்களை குவித்துள்ளார்.

இந்த வருடம் மட்டும் அவர் 7 இன்னிங்ஸ்களில் 1708 ரன்களை 61 என்ற மிகச்சிறந்த சராசரி விகிதத்தில் விளாசியுள்ளார், இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற உலக சாதனையை படைத்துள்ள ஜோ ரூட் ஒட்டுமொத்த பட்டியலில் 3வது வீரராகவும் இடம்பிடித்துள்ளார்.

தோப்பாகாது:

கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு, இதில் வெற்றி பெற அதில் விளையாடும் 11 பேரும் பங்காற்றினால் மட்டுமே வெற்றிக்கனியை சுவைக்க முடியும் ஆனால் இந்த வருடம் இங்கிலாந்தின் பேட்டிங்கில் ஜோ ரூட் மட்டும் ஆலமரமாய் தனிமரமாய் இங்கிலாந்துக்கு ரன்கள் குவித்துள்ளார்.

  • அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் ரோரின் பர்ன்ஸ் 530 ரன்களுடன் உள்ளார் ஆனால் 3வது இடத்தில் எஸ்ட்ராஸ் எனப்படும் உதிரி ரன்கள் இருப்பது இங்கிலாந்து ரசிகர்களின் நெஞ்சை புண்ணாக்குகிறது என்றே கூறலாம்.

2021 டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

  1. ஜோ ரூட் : 1708 ரன்கள்
  2. ரோரி பர்ன்ஸ் : 530 ரன்கள்
  3. எஸ்ட்ராஸ் : 412 ரன்கள்
  4. ஜானி பைர்ஸ்டோ : 391 ரன்கள்
  5. ஓலி போப் : 368 ரன்கள்.

இதிலிருந்தே அந்த அணியின் பேட்டிங் எந்த அளவுக்கு இந்த வருடம் இருந்ததுள்ளது என்பதையும் இதுதான் தோல்விக்கு விட்டது என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

டக் அவுட்:

இது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் 54 முறை இங்கிலாந்து பேட்டர்கள் டக் அவுட் ஆகியுள்ளனர், இதன் வாயிலாக ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை டக் அவுட் ஆன அணி என்ற தனது சொந்த உலக சாதனையை இங்கிலாந்து மீண்டும் சமன் செய்துள்ளது.

  • இங்கிலாந்து, 54 டக் அவுட்கள் - 1998
  • இங்கிலாந்து, 54 டக் அவுட்கள் - 2021*

இதிலிருந்து இங்கிலாந்து அணி இந்த வருடம் படுமோசமான பார்மில் இருப்பது தெரிகிறது, மேலும் மேற்கூறிய புள்ளி விவரங்களில் இருந்து "தனி மரம் தோப்பாகாது" என்ற பொன்னான வார்த்தைகளை ஜோ ரூட்டின் இங்கிலாந்து நிரூபித்துள்ளது என்றே கூறலாம்.

Previous Post Next Post

Your Reaction