தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் செஞ்சூரியன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது, முன்னதாக கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டே அன்று துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Photo Credits : Getty Images |
இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் இணைந்து மிகச் சறப்பான தொடக்கம் கொடுத்தனர், முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஜோடிகள் மயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
வலுவான இந்தியா:
அடுத்து வந்த அனுபவ வீரர் புஜாரா முதல் பந்திலேயே டக் அவுட்டாக பின் வந்த கேப்டன் விராட் கோலி 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார், இருப்பினும் மறுபுறம் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த கே எல் ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
- இவரின் அபார சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 272/3 என்ற மிகவும் வலுவான நிலையில் இந்தியா இருந்தது, களத்தில் ராகுல் 122 ரன்களுடனும் ரஹானே 40 ரன்களுடனும் இருந்தனர்.
சரிந்த இந்தியா:
இதை அடுத்து நடந்த 2வது நாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று துவங்கிய 3வது நாள் போட்டியில் அதிரடியாக பந்து வீசிய தென்ஆப்பிரிக்க பவுலர்கள் ராகுலை 123 ரன்களிலும் ரகானேவை 48 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆக்கினர்.
- அவ்வேளையில் 278/3 என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியா அதன்பின் சீட்டுக்கட்டு சரிவது போல எஞ்சிய விக்கெட்டுகளை எதிரணிக்கு பரிசளித்து முதல் இன்னிங்சில் பெறும் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது, தென் ஆப்ரிக்கா சார்பில் பந்துவீச்சில் அசத்திய லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
- அதன்பின் பந்து வீசிய இந்தியாவும் துல்லியமாக பந்துவீசி தென் ஆப்பிரிக்காவை 197 ரன்களுக்கு மடக்கிப் பிடித்து 3வது நாள் முடிவில் 12/1 ரன்களுடன் தென் ஆப்பிரிக்காவை விட 146 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
திருந்தாத இந்தியா:
முன்னதாக முதல் இன்னிங்சில் 278/3 என நல்ல நிலையில் இந்தியா இருந்த போது கண்டிப்பாக 400 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அடுத்த 7 விக்கெட்டுகளை வெறும் 49 ரன்களுக்குள் எதிரணிக்கு பரிசளித்து பெரிய ஸ்கோரை எடுக்கும் வாய்ப்பை நழுவ விட்டது.
இந்தியா இதுபோல நல்ல நிலையில் இருந்து சீட்டுக்கட்டு சரிவது போல விக்கெட்டுகளை எதிரணிக்கு தாரை வார்ப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. அதை பற்றி பார்ப்போம்:
1. 191 ஆல் அவுட், வெலிங்டன்:
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெல்லிங்டன் நகரில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி கொண்டிருந்த வேளையில் 2-வது இன்னிங்சில் 148/3 என ஓரளவு நல்ல நிலையில் இருந்தது ஆனால் அதன்பின் அடுத்த 7 விக்கெட்டுகளையும் மளமளவென எதிரணிக்கு கொடுத்து வெறும் 191 ரன்களுக்குச் சுருண்டது.
- இதனால் இறுதியில் அந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2 - 0 என ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது.
2. 36 ஆல் அவுட், அடிலெய்டு:
இந்த தருணம் பற்றி கூறத் தேவையில்லை, இருப்பினும் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிலெய்ட் நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 2-வது இன்னிங்சில் 9/1 என்ற நிலையில் இருந்த இந்தியா மீண்டும் எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்து கடைசியில் வெறும் 36/9 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது இந்திய ரசிகர்களால் காலத்துக்கும் மறக்க முடியாது.
3. 278 ஆல் அவுட், லீட்ஸ்:
கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 - 1* என முன்னிலை வகிக்கிறது, அந்த தொடரில் லீட்ஸ் நகரில் நடந்த 3வது போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 78 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டானது.
அதை தொடர்ந்து தோல்வியைத் தவிர்க்க 2வது இன்னிங்சில் 215/2 என நல்ல ஸ்கோருடன் போராடி விளையாடிக் கொண்டிருந்தது இருப்பினும் அதன் பின் எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் இங்கிலாந்துக்கு தாரை வார்த்த இந்தியா வெறும் 278 ரன்களுக்கு சுருண்டது, இதனால் அந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை இந்தியா சந்தித்தது.
ராகுல் ட்ராவிட்:
மொத்தத்தில் செஞ்சூரியன் போல கடந்த 2 வருடங்களாகவே இந்தியா அவ்வப்போது கொலாப்ஸ் எனப்படும் நல்ல நிலையில் இருந்தும் விக்கெட்டுகளை இழந்து வெற்றியை எதிரணிக்கு கோட்டை விட்டு வருகிறது, மிடில் ஆர்டர் பேட்டர்களின் பொறுப்பற்ற ஆட்டம் மற்றும் விராட் கோலி, புஜாரா, ரகானே போன்ற முக்கிய வீரர்களின் மோசமான பார்ம் போன்றவையே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
- இருப்பினும் 36 என்ற மோசமான தருணத்தில் பட்ட அனுபவத்திலிருந்து இன்னும் இந்தியா திருந்தவில்லை என்பதே இந்திய ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது,.இது பற்றி புதிதாக பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் கவனித்து விரைவில் இந்த குணத்தை மாற்ற வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.