நடைபெற்று வரும் ஆஷஸ் கோப்பை 2021/22 சீசனில் சொந்த மண்ணில் இங்கிலாந்தை மிரட்டி வரும் ஆஸ்திரேலியா இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3 - 0 என வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
Photo Credits : Getty Images |
முன்னதாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரின் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து அடிலெய்ட் நகரில் நடந்த 2வது போட்டியில் 275 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது.
படுதோல்வி:
இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டே அன்று மெல்பர்ன் நகரில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது, முதல் இன்னிங்ஸ்ஸில் அந்த அணி வெறும் 185 ரன்கள் ரன்களுக்கு சுருண்டது.
பின் ஆஸ்திரேலியா 267 ரன்கள் எடுக்க 2வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் வெறும் 68 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
வேதனையில் ரூட்:
இந்த தோல்வியையும் சேர்த்து ஜோ ரூட் தலைமையில் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து சந்திக்கும் 9வது தோல்வி இதுவாகும், இதன் வாயிலாக ஒரு காலண்டர் வருடத்தில் அதிக டெஸ்ட் தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை வங்கதேசத்துடன் இங்கிலாந்து பகிர்ந்து கொண்டது.
- அத்துடன் இந்த வருடம் 15 போட்டிகளில் ரூட் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து 9 தோல்விகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்தது, இதன் வாயிலாக ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலும் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் என்ற பரிதாபத்தை ஜோ ரூட் பெற்றார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளார்.
- ஜோ ரூட் - 24* தோல்விகள்
- அலெஸ்டர் குக் - 22 தோல்விகள்
உலகசாதனை:
இப்படி கேப்டனாக பல மோசமான சாதனையை படைத்த போதிலும் ஒரு பேட்டராக இந்த வருடத்தில் ஜோ ரூட் இமயமலையாய் ரன்களை குவித்துள்ளார்.
- இந்த வருடத்தில் 27 இன்னிங்ஸ்களில் 1708 ரன்களை 61 என்ற மிகச் சிறப்பான சராசரி விகிதத்தில் அவர் குவித்துள்ளார், இதில் 14 அரை சதங்களும் 6 சதங்களும் அடங்கும், இந்த வருடத்தில் பவுலராக ஒரு இன்னிங்ஸ்ஸில் 5 விக்கெட் ஹால் கூட எடுத்துள்ளார்.
இந்த 1708 ரன்கள் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் சாதனையை உடைத்து புதிய உலக சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
- ஜோ ரூட் : 1708 ரன்கள் (2021)*
- கிரேம் ஸ்மித் : 1656 ரன்கள் (2008)
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
- யூசுப் யுஹானா, பாகிஸ்தான் - 1788 (2006)
- சர் விவ் ரிச்சர்ட்ஸ், வெஸ்ட்இண்டீஸ் - 1710 (1976)
- ஜோ ரூட், இங்கிலாந்து - 1708 (2021)*
- கிரேம் ஸ்மித், தென்ஆப்பிரிக்கா - 1656 (2008)
- மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலியா - 1595 (2012)