கப் வெல்ல வேண்டும் என்ற ஃபயர் எனக்குள் இன்னும் இருக்கு - லக்னோ அணியின் புதிய ஆலோசகர் கம்பீர்

ஐபிஎல் 2022 தொடரில் ஏற்கனவே உள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கி சேர்க்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக ஐபிஎல் 2022 தொடரில் 10 அணிகள் பங்கு பெற உள்ளதால் இந்த புதிய 2 அணிகளை உருவாக்கும் வண்ணம் சிறிய அளவில் அல்லாத மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

Photo Credits : BCCI/IPL


முன்னதாக மெகா ஏலத்திற்கு முன்பாக ஏற்கனவே உள்ள 8 அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள் பற்றிய பட்டியல் கடந்த மாதம் வெளியானது, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

லக்னோ:

சுமார் 7090 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள லக்னோ அணி நிர்வாகம் தனது அணியை உருவாக்கும் அனைத்து வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது, கடந்த 2016 - 2017 ஆகிய ஆண்டுகளில் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா தான் இந்த லக்னோ அணியையும் இவ்வளவு கோடிகள் கொடுத்து உருவாக்கியுள்ளார்.

  • இவ்வளவு கோடிகளை செலவழித்து வலுவான அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ள அந்த அணி நிர்வாகம் முதல் கட்டமாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ஜாம்பவான் வீரர் ஆன்டி பிளவரை தனது அணியின் தலைமை பயிற்சியாளராக நீண்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

கெளதம் கம்பிர்:

இந்நிலையில் தங்கள் அணியின் ஆலோசகராக ஐபிஎல் 2022 தொடரில் செயல்படுவதற்கு இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கவுதம் கம்பீரை நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திகள் இன்று வெளியாகியுள்ளன. இவர் கடந்த 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அனுபவத்தைக் கொண்டவர் என்பதால் இந்த முடிவை அந்த அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஒரு கிரிக்கெட் வீரராக இந்தியா முதல் ஐபிஎல் தொடர் வரை அபாரமாக செயல்பட்ட கௌதம் கம்பீர் முதல் முறையாக பயிற்சியாளர் பொறுப்பை வகிக்க உள்ளார். இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்,

லக்னோ ஐபிஎல் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு மிகவும் நன்றி சஞ்சீவ் கோனேகா சார், இதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். வெற்றி பெற வேண்டும் என்ற நெருப்பு இன்னும் எனக்குள் எரிந்து கொண்டிருக்கிறது, வெற்றியாளராக வேண்டும் என்ற எண்ணம் இன்னும் எனக்குள் உத்வேகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது, அணியில் வெறும் ஒருவனாக இருக்க வேண்டும் என விரும்பாமல் உத்தரப்பிரதேசத்தின் உயிர் மூச்சாக இருக்க விரும்புகிறேன்.

என பதிவிட்டுள்ள கவுதம் கம்பீர் தன்னை ஆலோசகராக நியமித்தற்காக அணி உரிமையாளருக்கு நன்றியை தெரிவித்ததுடன் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நெருப்பு இன்னும் தனக்குள் ஏரிந்து கொண்டிருப்பதாக கூறினார். அத்துடன் லக்னோ அணி இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தை தனது உயிர் மூச்சாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022 தொடரில் நட்சத்திர வீரர் கே எல் ராகுலை தங்கள் அணியின் கேப்டனாக விளையாட வைக்க லக்னோ அணி நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருவதாக ஏற்கனவே பல செய்திகள் வெளியாகி வருகின்றன, அது நடக்கும் பட்சத்தில் கௌதம் கம்பீர் பார்வையின் கீழ் கே எல் ராகுல் தலைமையில் வரும் ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ அணி களமிறங்குவதை விரைவில் பார்க்கலாம்.

Previous Post Next Post

Your Reaction