சிஎஸ்கே நான் படித்த ஸ்கூல், எப்படி மறப்பேன், மீண்டும் விளையாடுவேன் - ரவிச்சந்திரன் அஷ்வின்

ஐபிஎல் 2022 தொடரில் புதியதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் அதற்காக மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளை தவிர ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பிய வீரர்களை தக்க வைத்து அதற்கான விபரங்களையும் வெளியிட்டுள்ளன.

Photo Credits : Getty Images


இருப்பினும் சென்னை, மும்பை உள்ளிட்ட பல அணிகளில் எதிர்பார்க்கப்பட்ட சில முக்கியமான வீரர்கள் தக்க வைக்கப்படாமல் அந்தந்த அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக டெல்லி கேப்பிடல் அணிக்கு விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை தக்கவைக்காமல் அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூற வேண்டும் ஏனெனில் அதற்கு 2 வருடம் முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த அவரை மிகுந்த விருப்பத்துடன் டெல்லி வாங்கியது.

அவரும் டெல்லி அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார், அதன் காரணமாகவே 4 வருடங்கள் கழித்து இந்திய டி20 அணியில் இடம் பிடித்து அசத்தினார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையிலும் கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக பந்துவீசியதால் அவரை டெல்லி நிச்சயமாக தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை என் ஸ்கூல்:

இருப்பினும் அவரை டெல்லி அணி தக்க வைக்கவில்லை என்பதால் அவர் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது சொந்த ஊரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் விளையாடுகிறீர்களா என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளிக்கையில், 

சிஎஸ்கே எனது இதயத்திற்கு நெருக்கமானது, சொல்லப்போனால் சிஎஸ்கே என்னுடைய ஸ்கூல் போன்றது. அங்குதான் நான் எல்கேஜி யுகேஜி முதல் பயின்று இடைநிலைக் கல்வியை கற்று 10ம் வகுப்பை மிகச் சிறப்பாக படித்தேன். பின்னர் 11 மற்றும் 12ம் வகுப்புகளை வேறு பள்ளிகளில் பயின்று கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். இருப்பினும் இவை அனைத்தையும் முடித்துவிட்டு நான் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்பது சரிதானே? எனவே நானும் வீட்டிற்கு (சென்னைக்கு) திரும்ப விரும்புகிறேன், இருப்பினும் இவை அனைத்தும் ஏலத்தை பொருத்ததாகும்

என தனக்கே உரித்தான பாணியில் ஜாலியாக தெரிவித்தார், அவர் கூறுவது போல உண்மையாகவே அவருடைய இந்திய கிரிக்கெட் வாழ்க்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடங்கியது என்று கூறலாம்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை அணியில் விளையாடிய அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனி வளர்த்த பல தரமான வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவராக வளர அடுத்த ஒரு சில வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்ற அவர் தற்போது இந்தியாவின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.

மீண்டும் விளையாட ஆசை:

2015 ஆம் ஆண்டு சென்னை அணியில் இருந்து விலகிய அவர் அதன்பின் பஞ்சாப், டெல்லி போன்ற அணிகளில் விளையாடி வருகிறார்.

ஏலத்தில் அனைத்து 10 அணிகளும் 10 வேறுவிதமான திட்டங்களுடன் வரும் என்பதால் எந்த அணியில் நாம் விளையாடுவோம் என்பது பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் எந்த அணி என்னை தேர்வு செய்தாலும் வாங்கும் சம்பளத்திற்கு என்னால் முடிந்தவரை முழுமூச்சுடன் விளையாடி அவர்களைக் கீழே விடாமல் பார்த்துக்கொள்வேன்

என இது பற்றி அவர் மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கு முழு விருப்பம் எனவும் இருப்பினும் ஏலத்தில் எந்த அணி தேர்வு செய்தாலும் அவர்களுக்கு முழு மனதுடன் உண்மையாக விளையாடுவேன் எனவும் அஷ்வின் தெரிவித்தார்.

Previous Post Next Post

Your Reaction