கங்குலியை எப்படி குற்றம் சொல்லலாம், உங்க வேலையை மட்டும் பாருங்க - விராட் கோலிக்கு கபில் தேவ் கொட்டு

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது, சமீபத்திய டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.


ஆனால் இதுவரை அவர் கேப்டனாக ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியாத காரணத்தால் அவரை முன்னறிவிப்பின்றி பிசிசிஐ அதிரடியாக நீக்கியது, ஒன்டே மற்றும் டி20 என 2 வெள்ளை பந்து போட்டிகளுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என நினைத்த பிசிசிஐ ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா 5 கோப்பைகளை வென்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்தது.

மதிக்காத பிசிசிஐ:

அத்துடன் விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் சண்டை உட்பட பல சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன, அந்த வேளையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களை நேற்று சந்தித்த விராட் கோலி காற்றில் பறந்த அத்தனை வதந்திகளுக்கும் நேரடியாக பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

அதில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது பற்றி தெளிவாக பிசிசிஐ தம்மைத் தொடர்ந்து கொண்டு பேசவில்லை என விராட் கோலி குற்றம் சாட்டியிருந்தார், குறிப்பாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியை தேர்வு செய்த தருணத்தில் வெறும் 1.5 மணி நேரம் முன்பாக மட்டுமே அந்த முடிவை தேர்வு குழுவினர் தம்மிடம் தெரிவித்தனர் என கூறினார்.

கங்குலி - கோலி சர்ச்சை:

அத்துடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியை கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை என சவுரவ் கங்குலி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அது பற்றிய கேள்விக்கு " டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என யாரும் என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக் கொள்ளவில்லை" என பதிலளித்த அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்க்கும் - அவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலை வெளி உலகுக்கு போட்டு உடைத்தது.

உங்க வேலையை பாருங்க:

இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பற்றிய விராட் கோலியின் கருத்துக்கு இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி ஏபிபி செய்தியில் அவர்,

இந்த நேரத்தில் நீங்கள் யாரையும் கைகாட்டி குறை சொல்வது நல்லதல்ல, தற்போது தென் ஆப்பிரிக்க தொடர் வருவதால் அதில் மட்டும் உங்களது கவனத்தை செலுத்துங்கள். இந்திய கிரிக்கெட்டின் தலைவர் எப்போதும் தலைவரே மறுபுறம் இந்திய அணியின் கேப்டனும் முக்கியமானவரே, இருப்பினும் கங்குலி அல்லது விராட் கோலி என யாராக இருந்தாலும் ஒருவரை ஒருவர் வெளிப்படையாக மோசமாக பேசிக்கொள்வது என்னைப் பொறுத்தவரை நல்ல விஷயம் அல்ல.

என தெரிவித்த கபில் தேவ் இந்திய அணி நிர்வாகத்தின் உள்ளே நடக்கும் சில முக்கியமான விஷயங்களை இப்படி விராட் கோலி வெளியில் வெளிப்படையாக பேசுவது சரியானது அல்ல எனவும் வருகின்ற தென் ஆப்ரிக்க தொடரில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் எனவும் மறைமுகமாக கொட்டு வைத்தார்.

எப்படி வெளியே பேசலாம்:

இது போன்ற தருணங்களை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு நமது நாட்டிற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தவறு எதுவாக இருந்தாலும் அது விரைவில் தெரியவரும் ஆனால் அதை பப்ளிக்காக பேசுவது அதுவும் இந்த தருணத்தில் பேசுவது மிகவும் தவறாகும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த முக்கிய சுற்றுப்பயணத்தில் இது போன்ற சர்ச்சை வராமல் இருக்க விரும்புகிறேன்

என இது பற்றி மேலும் தெரிவித்த கபில்தேவ் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி பற்றி விராட் கோலி வெளிப்படையாக பேசியது கண்டிப்பான தவறு என விமர்சனம் செய்துள்ளார்.

Previous Post Next Post

Your Reaction