IND vs SA : முதல் டெஸ்டில் களமிறங்கி வெற்றியை பெற தகுதியான உத்தேச 11 பேர் இந்திய அணி இதோ

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா கமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்க உள்ளது, இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த ஒரு வாரமாக தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Photo Credits : Getty Images


இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் இருக்கும் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

சவாலே சமாளி:

இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஆசியக் கண்டத்திற்கு வெளியே உள்ள கடினமாக நாடுகளில் இந்தியா இதற்கு முன் டெஸ்ட் தொடர்களை வென்று சரித்திரம் படைத்துள்ளது ஆனால் இந்த தென் ஆப்பிரிக்காவில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் இந்தியா வெறும் கையோடு நாடு திரும்பி வருகிறது.

  • அந்த அளவுக்கு சவால் மிகுந்த தென்னாப்பிரிக்காவில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று வரலாற்றை இந்தியா மாற்றி எழுதுமா என இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

உத்தேச அணி:

இப்படி பட்ட சவாலான போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் அணியில் விளையாடும் 11 பேரும் மிக சிறப்பானவர்களாக இருக்க வேண்டும் அப்போது தான் இந்தியாவால் வெற்றியை நெருங்க முடியும். அந்த வகையில் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தகுதியான 11 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி பற்றி பார்ப்போம்:

பேட்டர்கள்:

டாப் ஆர்டர்:

இந்த தொடருக்கு முன்பாக மிகச்சிறந்த பார்மில் இருந்த ரோகித் சர்மா விலகியது இந்தியாவின் பேட்டிங் துறைக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது என்றே கூறலாம், மேலும் சுப்மன் கில் காயம் அடைந்த காரணத்தினால் வேறு வழியின்றி கேஎல் ராகுல் - மயங் அகர்வால் ஆகியோரையே இந்தப் போட்டிக்கு தொடக்க வீரர்களாக தேர்வு செய்தாக வேண்டியுள்ளது.

  • கர்நாடகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த பல வருடங்களாக உள்ளூர் முதல் சர்வதேச போட்டிகள் வரை இணைந்து விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பது இந்த ஓப்பனிங் ஜோடியில் சாதகமான அம்சமாகும்.
  • மேலும் இந்த ஜோடியில் கேஎல் ராகுல் தற்போது நல்ல பார்மில் இருக்க சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து பார்முக்கு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 3வது வீரராக புஜாராவுக்கு அவரின் அனுபவத்தை மதிப்பு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த சில வருடங்களாக இவர் பார்ம் இல்லாமல் தவித்தாலும் 2021இல் ஆஸ்திரேலியாவில் நடந்த சிட்னி டெஸ்டிலும் சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடந்த லார்ட்ஸ் டெஸ்டிலும் முக்கியமான ரன்களை அடித்தார்.

மிடில் ஆர்டர்:

4வது இடத்தில் எந்தவித கேள்வியுமின்றி விராட் கோலி களமிறங்குவார், என்னதான் பார்ம் இல்லாமல் இருந்தாலும் இவரைப் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் எப்போதுமே முக்கியமான நேரத்தில் ரன்களை அடிக்கக்கூடிய திறமையானவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

5வது இடத்தில் விளையாடி வந்த அஜின்க்யா ரகானே கடந்த 2 வருடங்களாக படுமோசமான பார்மில் உள்ளதுடன் லேசான காயத்தில் இருக்கிறார், மேலும் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அறிமுகமாக களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் வெளிநாடுகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர், எனவே 5வது இடத்தில் ஹனுமா விஹாரி விளையாட தகுதியானவராக உள்ளார்.

  • அத்துடன் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக அதன் மண்ணில் நடைபெற்ற பயிற்சி டெஸ்ட் தொடரில் இவர் 2 அரை சதங்கள் உட்பட 250+ ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா கால சூழ்நிலைக்கு தன்னை ஏற்கனவே உட்படுத்தி கொண்டுள்ளது முக்கிய அம்சமாகும்.

6வது இடத்தில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் கண்டிப்பாக விளையாடுவார்.

பவுலர்கள்:

7வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்துள்ள காரணத்தால் அவருக்கு பதில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என நம்பலாம்.

  • உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளராக இருப்பது மட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் அவர் 2வது இடத்தில் உள்ளார், எனவே ஒரு சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட தகுதியானவர்.

8வது இடத்தில் ஒரு பவுலர் என்பதைவிட அவர் ஓரளவு ரன்கள் குவிக்க கூடியவராகவும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அந்தவகையில் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா கடந்த ஒரு வருடமாகவே சிறப்பாக பந்து வீசவே தடுமாறி வருகிறார், பேட்டிங் சொல்லவே வேண்டாம்.

  • எனவே 8வது இடத்தில் ஷர்துல் தாகூர் விளையாட முழு தகுதியானவர் என்றே நான் கூறுவேன் ஏனெனில் 2021இல் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்திலும் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் எப்படி இருந்தது என்பது பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.

9வது இடத்தில் முகமத் ஷமியும் 10வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவும் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடிப்பார்கள், கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்த ஜோடி 89* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றி பெற செய்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

  • 11வது இடத்தில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகம்மது சிராஜ்க்கு வாய்ப்பு அளிக்கலாம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்க இருக்கும் உத்தேச இந்திய அணி இதோ:

கேஎல் ராகுல், மயங் அகர்வால், செடேஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷார்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Previous Post Next Post

Your Reaction