Vijay Hazare Trophy 2021 : மீண்டும் சதம் விளாசி விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கைக்வாட் ஆனால் கைகொடுக்காத அதிர்ஷ்டம்

விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிந்துள்ளன, கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் தமிழ்நாடு உட்பட மொத்தம் 38 அணிகள் பங்கு பெற்றன.

Photo Credits : BCCI Domestic


இந்த தொடரில் பங்கேற்ற 5 லீக் போட்டிகளில் முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்ற போதிலும் கடைசி 2 போட்டிகளில் தமிழ்நாடு பரிதாப தோல்வி அடைந்தது, இருப்பினும் ரன் ரேட் காரணமாக எலைட் குரூப் பி பிரிவில் கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

மிரட்டிய ருதுராஜ்:

இதே தொடரில் மகாராஷ்டிராவின் கேப்டனாக செயல்பட்டு வரும் இளம் வீரர் ருத்ராஜ் கைக்வாட் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்து எதிர் அணி பந்து வீச்சாளர்களை பந்தாடி ரன்களை மழையாக பொழிந்தார் என்று கூறலாம், ஐபிஎல் 2021 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்த இவர் அதே பார்மை அப்படியே இங்கு தொடர்ந்தார்.

ஓப்பனிங் வீரராக களமிறங்கிய இவர் மத்தியபிரதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்து 136 ரன்களும், சட்டிஸ்கர் அணிக்கு எதிரான 2வது போட்டியில் மேலும் ஒரு படி போய் சதமடித்து 154* ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து மஹாராஷ்டிராவை வெற்றி பெறச் செய்தார்.

  • பின் நடைபெற்ற கேரளாவுக்கு எதிரான 3வது போட்டியில் மீண்டும் சதம் அடித்த அவர் 124 ரன்கள் குவித்து ஹாட்ரிக் சதம் விளாசி சாதனையும் படைத்தார்.

4 சதங்கள்:

அதை தொடர்ந்து உத்தரகாண்ட் அணிக்கு எதிரான 4-வது போட்டியில் 21 ரன்களில் அவுட்டான போதிலும் நேற்று நடைபெற்ற சண்டிகர் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது லீக் போட்டியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார்.

அந்த முக்கிய போட்டியில் 168 ரன்கள் விளாசி விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரில் 4வது முறையாக சதம் அடித்து அசத்தினார், இதன் வாயிலாக விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.

விஜய் ஹசாரே கோப்பையின் ஒரு சீசனில் அதிக சதம் அடித்த வீரர்கள்:

  • விராட் கோலி : 4 (2008/09)
  • தேவுட் படிக்கல் : 4 (2020/21)
  • பிரிதிவி ஷா : 4 (2020/21)
  • ருதுராஜ் கைக்கவாட் : 4* (2021/22)

பரிதாப மகாராஷ்டிரா:

இப்படி அதிரடியாக விளையாடிய போதிலும் இந்த தொடரின் காலிறுதிச் சுற்றுக்கோ அல்லது அதற்கு முந்தைய சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் அவர் கேப்டன்ஷிப் செய்த மகாராஷ்டிரா ரன் ரேட் அடிப்படையில் அணி பரிதாபமாக வெளியேறியது.

  • மகாராஷ்டிரா இடம் பிடித்திருந்த எலைட் குரூப் டி பிரிவில் 1, 2, 3, 4 ஆகிய இடங்களில் முறையே கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 அணிகளும் பங்கேற்ற தலா 5 போட்டிகளில் தலா 4 வெற்றிகளையும் தலா 1 தோல்வியையும் பெற்று முதல் 4 இடங்களைப் பிடித்தன.
  • இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் கேரளா முதலிடத்தை பிடித்து காலிறுதி சுற்றுக்கு நேரடியாகவும் மத்திய பிரதேசம் 2வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றது.

எலைட் குரூப் பி பிரிவின் ரன் ரேட்:

  • கேரளா : +0.984
  • மத்திய பிரதேசம் : +0.485
  • மகாராஷ்டிரா : +0.104
  • சட்டிஸ்கர் : -0.141

ஒருவேளை 2வது இடத்தை பிடித்து இருந்தால் கூட காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதி பெற்று அதில் வெற்றி பெற்று இந்த தொடரின் காலிறுதி போட்டிக்கு மகாராஷ்டிரா அணியால் தகுதி பெற்றிருக்க முடியும் ஆனால் ருத்ராஜ் மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும் அதிர்ஷ்டம் கை கொடுக்காத காரணத்தால் அவரும் அவரின் அணியும் ஏமாற்றத்துடன் வெளியேறியது.

நெருப்பு ருதுராஜ்:

இருப்பினும் இந்த தொடரின் லீக் சுற்றில் 5 போட்டிகளில் பங்கேற்ற ருத்ராஜ் 4 சதங்கள் உட்பட 603 ரன்களை 150.75 என்ற வியக்கவைக்கும் சராசரி விகிதத்தில் 112.92 என்ற மிகச் சிறப்பான சராசரி விகிதத்தில் குவித்துள்ளார், அத்துடன் 51 பவுண்டரிகளையும் 19 சிக்ஸர்களையும் பறக்க வைத்துள்ளார்.

  • இதன் காரணமாக வரும் ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இவர் விளையாடுவது உறுதியாகி உள்ளது என்றே கூறலாம்.

Previous Post Next Post

Your Reaction