ரோகித்துகும் எனக்கும் சண்டை இல்லை, கங்குலி - பிசிசிஐ என்கிட்ட எதுவும் பேசவில்லை : வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த விராட் கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 26 முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது, அதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.


இந்த சுற்றுப் பயணத்தில் முதலில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கேப்டன்:

இருப்பினும் அதன் பின் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த வேளையில் மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காயம் ஏற்பட்டதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித்சர்மா விலகுவதாகவும் அவருக்கு பதில் பிரியங் பஞ்சல் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

  • அந்த செய்தி வெளியான அடுத்த சில மணி நேரங்களில் டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வு எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

சண்டையா:

இதை அடுத்து ஒரு நாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக பல இந்திய ரசிகர்கள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் மும்முரமாக பேசி வருகிறார்கள்.

  • குறிப்பாக விராட் கோலி ஓய்வு எடுக்க உள்ளதாக கூறியுள்ள நேரம் சிறந்ததாக இல்லை என இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெளிப்படையாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சண்டை இல்லை:

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பாக இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அந்த அனைத்து கேள்வி பதில்களும் இதோ:

ஒருநாள் தொடரிலிருந்து நீங்கள் ஓய்வு எடுக்கப் போகிறீர்கள் என்ற செய்தி உண்மையா, ஒருநாள் தொடரில் பங்கேற்பீர்களா?

எப்போதுமே இந்திய அணியின் தேர்வுக்கு நான் தயாராக உள்ளேன், இது போன்ற கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்காமல் இதுபற்றி உண்மையான தகவல்கள் இல்லாமல் எழுதுபவர்களிடம் சென்று கேளுங்கள், நான் எப்போதும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன்.

ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து உங்களை நீக்கியது மற்றும் பதவி விலக 48 மணி நேரம் கெடு விதித்தது என்பது போல வெளியான செய்திகளுக்கு உங்களுடய பதில்?

5 தேர்வுக்குழு தலைவர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் என்னை கேப்டனாக இல்லாமல் இந்திய அணியை தேர்வு செய்ய விரும்புவதாக கூறினார்கள் நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். இந்திய அணியை தேர்வு செய்ய 1.5 மணி நேரம் முன்பாக தான் என்னை இந்திய தேர்வு குழுவினர் அழைத்து பேசினர், அதில் இந்திய டெஸ்ட் அணியைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

அந்த அழைப்பு துண்டிக்கப்படும் ஒரு சில நிமிடங்கள் முன்பாக மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் என்னை கேப்டனாக மாற்றுவது பற்றி தெரிவித்தனர், அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன், இருப்பினும் கேப்டன்ஷிப் பற்றி பிசிசிஐ தெளிவாக தொடர்பு கொள்ளவில்லை. ஆம் நாங்கள் ஒரு ஐசிசி உலக கோப்பையை கூட வெல்லவில்லை இருப்பினும் அடுத்த வருடத்தில் எந்த ஒரு 50 ஓவர் உலகக் கோப்பையும் நடைபெறவில்லை என்பதால் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கியதில் என்ன லாஜிக் இருக்கிறது என புரியவில்லை

டி20 கேப்டனாக பதவி விலக வேண்டாம் என விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என சவுரவ் கங்குலி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என யாரும் என்னை தொடர்புகொண்டு கூறவில்லை

ரோஹித் சர்மாவுடன் உங்களுக்கு சண்டை என வதந்திகள் வருவது பற்றி?

ரோஹித் சர்மாவுக்கும் எனக்கும் எப்போதும் சண்டை இருந்ததே இல்லை, இதை கடந்த இரண்டரை வருடங்களாக கூறி கூறி நான் அலுத்துப் போய் விட்டேன்

ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டது மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளது பற்றி உங்களின் கருத்து?

ரோஹித் தர்மா கையாளக் கூடிய சிறந்த கேப்டன், குறிப்பாக நுணுக்கங்களை கையாளும் வகையில் சிறந்தவர். அதை இந்தியாவிற்காகவும் ஐபிஎல் தொடரிலும் நாம் பார்த்துள்ளோம், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருக்குமே எனது முழு ஆதரவு எப்போதும் கிடைக்கும். தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவை இந்திய அணி மிகவும் மிஸ் செய்யும் ஏனென்றால் இங்கிலாந்து தொடரில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார்

என பல முக்கிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி இந்தியாவிற்காக பேட்டிங் செய்வதை எப்போதும் பெருமையாக விரும்புவதாக தெரிவித்தார், அத்துடன் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்தபோது தன்னால் முடிந்த முழுமூச்சுடன் பேட்டிங் செய்ததாகவும் கூறினார்



Previous Post Next Post

Your Reaction