தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று செஞ்சூரியன் நகரில் துவங்கியது.
| Photo Credits : Getty Images |
ஒருநாள் தொடர்:
இதை அடுத்து வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் இந்த 2 அணிகள் மோத இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது, தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வு குழுவினர் விரைவில் கூட உள்ளனர்.
- நேற்று நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரில் கலக்கிய ருத்ராஜ் கைக்வாட், வெங்கடேஷ் ஐயர் போன்ற இளம் வீரர்களின் பெயர்கள் இந்த தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவிச்சந்திரன் அஷ்வின்:
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 வருடங்களுக்கு பின்னர் இடம் பிடிப்பார் என கிரிக்பஸ் இணையதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாட துவங்கிய இவர் அதன்பின் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் முக்கிய சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்தார், குறிப்பாக 2011 உலக கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி போன்ற இந்தியா வெற்றி பெற்ற முக்கிய உலக கோப்பை இந்திய அணியில் இவரா இடம் பெற்றிருந்தார்.
- 2017 வரை ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணியில் விளையாடி வந்த இவர் அப்போது கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
மீண்டு வந்த அஷ்வின்:
இருப்பினும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மனம் தளராமல் அபாரமாக விளையாடிய இவருக்கு 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பில் மிகவும் சிறப்பாக பந்து வீசிய காரணத்தால் கடந்த மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த தொடரிலும் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்து வீசியது புதியதாக பொறுப்பேற்றுள்ள தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் முழு நேர வெள்ளை பந்து கேப்டன் ரோகித் சர்மாவை கவர்ந்துள்ளதாக தெரிகிறது, மேலும் மற்றொரு சுழல் பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா காயத்தில் உள்ள காரணத்தால் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகிறது, இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காத்திருந்து பார்க்க வேண்டும்.
- கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அஸ்வின் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.