டெஸ்ட் சாம்பியன் நியூஸிலாந்தை மண்ணை கவ்வ செய்து ஷாக் கொடுத்த வங்கதேசம் ! 6 வரலாற்று சாதனை

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று பே ஓவல் மைதானத்தில் துவங்கியது.

Photo Credits : Getty Images


இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 328 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே சதம் விளாசி 122 ரன்கள் ஹென்றி நிகோலஸ் 75 ரன்களும் எடுத்தனர், நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக இஸ்லாம் மற்றும் ஹஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

மிரட்டிய வங்கதேச பேட்டிங்:

இதை அடுத்து களமிறங்கிய வங்கதேசத்திற்கு தொடக்க வீரர் இஸ்லாம் 22 இடங்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும் அடுத்தாக வந்த ஜாய் 78 ரன்கள், சாண்டோ 64 ரன்கள், கேப்டன் மோனிமுல் ஹயிக் 88 ரன்கள், லிட்டன் தாஸ் 86, ஹசன் 47 ரன்கள் என அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து ரன்களை குவித்தனர்.

  • இதன் காரணமாக முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்த அந்த அணி நியூசிலாந்தை விட 130 ரன்கள் முன்னிலை பெற்றது.

வங்கதேசம் வெற்றி:

இதை தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்துக்கு மிகச் சிறப்பாக பந்துவீசிய வங்கதேசம் பேரதிர்ச்சி அளித்தது, அந்த அணியின் தொடக்க வீரர் வில் எங் 69 ரன்கள் எடுக்க இதர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

  • ஒரு கட்டத்தில் 136/5 என திண்டாடிய அந்த அணியை காப்பாற்ற போராடிய அனுபவ வீரர் ராஸ் டெய்லரும் 40 ரன்களில் அவுட் ஆக வெறும் 169 ரன்களுக்கு நியூசிலாந்து சுருண்டது.

வங்கதேசத்தின் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய எபோடட் ஹுசைன் 6 விக்கெட்டுகள் சாய்த்து வெற்றியை உறுதி செய்தார், இறுதியில் வெறும் 40 என்ற இலக்கை துரத்திய வங்கதேசம் 2 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வரலாற்று வெற்றி:

இந்த வெற்றியின் வாயிலாக உலக டெஸ்ட் சாம்பியனாக இருக்கும் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து பல வரலாற்று சரித்திரங்களை வங்கதேசம் படைத்துள்ளது. அவையாவன:


1. நியூஸிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து முதல்முறையாக வங்கதேசம் ஒரு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

  • இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து மண்ணில் 32 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அந்த அணி எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்றதே கிடையாது.

2. அதேபோல் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக வங்கதேசம் வெற்றி பெற்று சரித்திரத்தை எழுதியுள்ளது.

  • இந்தப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக 9 போட்டிகளில் பங்கேற்ற வங்கதேசம் அந்த 9 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி பெற்றது, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

3. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் சாம்பியனாக இருக்கும் நியூசிலாந்து 17 டெஸ்ட் போட்டிகளுக்கு பின் முதல் முறையாக தனது சொந்த மண்ணில் மண்ணை கவ்வி ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றுள்ளது.

4. இந்த போட்டியில் வென்றதன் வாயிலாக குறைந்தபட்சம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தது.

  • இதன் வாயிலாக 8 டெஸ்ட் தொடர்களுக்கு பின் முதல் முறையாக நியூசிலாந்து தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெற்றி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.

5. மேலும் இப் போட்டியின் முதல் இன்னிங்சில் 458 ரன்கள் எடுத்த வங்கதேசம் கடந்த 2010க்குப் பின் நியூசிலாந்து மண்ணில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் எடுத்த ஆசிய அணி என்ற சாதனை படைத்துள்ளது.

6. இத்துடன் கடந்த 10 வருடங்களில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் வங்கதேசம் அடைந்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction