ICC Women's World Cup 2022 : இந்திய மகளிர் அணி அறிவிப்பு, கழட்டிவிடப்பட்ட ஷிகா பாண்டே

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் முதல் நியூசிலாந்து நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது, வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நியூசிலாந்தில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கு பெற உள்ளன.

Photo Credits : Getty Images


மகளிர் கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடரான இந்த உலக கோப்பையில் லீக் சுற்று நாக்அவுட் சுற்று மற்றும் பைனல் உட்பட மொத்தம் 31 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய அணி:

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் மார்ச் 6ஆம் தேதியன்று எதிர்கொள்ள உள்ளது, அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வலுவான அணிகளையும் எதிர்கொள்ளும் இந்தியா இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் பட்சத்தில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் அணியின் முழு போட்டி அட்டவணை இதோ👇படிக்க 

ICC Women's World Cup 2022 : பாகிஸ்தானுடன் முதல் போட்டி, இந்தியாவின் முழு அட்டவணை வெளியீடு

அணி அறிவிப்பு:

இந்த நிலையில் இந்த உலக கோப்பையில் பங்குபெறும் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் மீண்டும் செயல்பட உள்ளார், துணை கேப்டனாக மற்றொரு அனுபவ வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்துள்ள அனுபவ வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி, 17 வயதிலேயே எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதுபோக யாசிக்கா பாட்டியா, பூஜா வஸ்திரக்கர், ஸ்னே ராணா போன்ற கடந்த வருடம் இந்தியாவிற்காக சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளின் பெயர்களும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளன.

ஆனால் ஆல்ரவுண்டர் வீராங்கனையான ஷிகா பாண்டே மற்றும் பேட்டிங் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆகியோர் இந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர், இவர்கள் கடந்த வருடம் இந்தியாவிற்காக விளையாடிய போட்டியில் சிறப்பாக செயல்பட தவறியதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, குறிப்பாக ஜெமிமா ரோட்ரிகஸ் கடந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடிய எந்த ஒரு போட்டியிலும் இரட்டை இலக்க ரன்களை கூட தொடவில்லை.

நியூஸிலாந்து தொடர்:

முன்னதாக இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்து கால சூழ்நிலைக்கு தயாராகும் வண்ணம் அந்த நாட்டிற்கு பிப்ரவரி மாதமே செல்ல இருக்கும் இந்திய அணி அங்கு அந்த அணிக்கு எதிராக இந்த உலக கோப்பைக்கு முன்பாக ஒரு டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது, இதில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒரு டி20 போட்டியில் மட்டும் மிதாலி ராஜ் ஓய்வெடுக்க உள்ளார், அவருக்கு பதில் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்ஷிப் உள்ளார்.

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2022 மற்றும் நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணி இதோ:

மித்தாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீட் கௌர் (துணை கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷிகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஸ் (கீப்பர்), ஸ்னே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரக்கர், எம் சிங், ஆர்எஸ் தாகூர், டானியா பாட்டியா (கீப்பர்), ராஜேஸ்வரி கையகவாட, பூனம் யாதவ்.

Previous Post Next Post

Your Reaction