தோனிக்கு கிடைத்த ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை - தோனி, பிசிசிஐ மீது ஹர்பஜன் சிங் புதிய குற்றசாட்டு

இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த வாரம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், கடந்த 1998 இல் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாட தொடங்கிய இவர் அதன் பின் அடுத்த சில வருடங்களில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

Photo Credits : Getty Images


2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த இவர் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

கழட்டிவிடப்பட்ட ஹர்பஜன்:

2010 போன்ற காலகட்டங்களில் இவர் 400 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்த போதிலும் ஆரம்ப காலக்கட்டங்களை போல எதிரணிகளை அச்சுறுத்தி விக்கெட்டுகளை எடுப்பவராக இல்லாத காரணத்தால் இவரை இந்திய அணி நிர்வாகம் கழட்டிவிட துவங்கியது, குறிப்பாக 2011 ஆம் ஆண்டு இளம் வீரர்களாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளிக்க துவங்கியது.

இறுதியில் 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை எடுத்த இவர் கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையின் காலே நகரில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடினார்.

குற்றசாட்டு:

இந்நிலையில் இந்திய அணி நிர்வாகத்தில் தனக்கு யாரும் பெரிய அளவில் ஆதரவு அளிக்கவில்லை என பிசிசிஐ மீது ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி ஜீ நியூஸ் தொலைக்காட்சியில் அவர்,

எனக்கும் அதிர்ஷ்டம் எப்போதும் இருந்தது இருப்பினும் ஒருசில வெளிப்புற சக்திகள் எனக்கு சாதகமாக இல்லாமல் எனக்கு எதிராக புகார் அளித்தன. நான் பந்து வீசி வளர்ச்சியை நோக்கி நகர்ந்த விதம் இதற்கு காரணமாக அமைந்தது. நான் 400 விக்கெட்டுகளை எடுத்த போது எனக்கு 31 வயது, அந்த சமயத்தில் அடுத்த 4 - 5 வருடங்கள் விளையாடினால் ஒரு மிகப்பெரிய இலக்கை எட்டுவேன் என எனக்கு நானே இலக்கு வைத்து இருந்தேன், அதாவது இன்னும் 100 - 150 விக்கெட்டுக்களை அதிகமாக எடுத்து இருந்திருப்பேன்

என கூறியுள்ள அவர் இந்திய அணி நிர்வாகத்தையும் தாண்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தமக்கு ஒரு சில எதிரிகள் இருந்ததாக மறைமுகமாக கூறியுள்ளார்.

பிசிசிஐ - தோனி :

அந்த நேரத்தில் தோனி கேப்டனாக இருந்தார் ஆனாலும் அவரையும் தாண்டி அவருக்கு மேலே ஒன்று இருந்தது, சொல்லப்போனால் சில பிசிசிஐ நிர்வாகிகள் இதில் ஈடுபட்டு நான் விளையாட கூடாது என விரும்பினர் ஆனால் எனக்கு கேப்டன் ஆதரவு அளிக்க விரும்பினார் இருப்பினும் கேப்டனை விட பிசிசிஐ பெரியது. இந்திய அணி, கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் இவர்களை விட பிசிசிஐ நிர்வாகிகள் மிகப் பெரியவர்கள். 


அவர்களிடம் தோனிக்கு அதிக ஆதரவு இருந்தது, ஒரு வேளை தோனிக்கு கிடைத்த அதே ஆதரவு அப்போது அணியில் இருந்த இதர வீரர்களுக்கும் கிடைத்திருந்தால் அவர்களும் அவர் போலவே விளையாடி இருப்பார்கள், இது அணியில் உள்ள மற்ற வீரர்கள் பேட்டை சுழற்ற மறந்து விட்டார்கள் அல்லது திடீரென எப்படி பந்து வீசுவது என தெரியாதது போல் இல்லை 

என இது பற்றி மேலும் தெரிவித்த ஹர்பஜன் சிங் இந்திய அணி நிர்வாகத்தில் தோனிக்கு அதிக செல்வாக்கு இருந்ததாகவும் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு தங்களைப்போன்ற வீரர்களுக்கு கிடைத்திருந்தால் இன்னும் சிறிது காலம் விளையாடி இருக்கலாம் என குற்றம் சாட்டினார்.

இந்திய ஜெர்ஸியில் விடை பெறவே அனைவரும் விரும்புவார்கள் ஆனால் பலமுறை நமக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதில்லை என்பதால் நாம் விரும்புவது நமக்கு நடைபெறுவதில்லை. விவிஎஸ் லக்ஷ்மன், ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் வாய்ப்பு கிடைக்காததால் வேறு வழியின்றி ஓய்வு பெற்றனர்.


நான் எப்படிப்பட்டவன், என்னால் என்ன முடியும் போன்ற எனது வாழ்க்கையைப் பற்றிய கதையை திரைப்படமாக அல்லது வெப் சீரியசாக எடுக்க விரும்புகிறேன், அதில் வில்லன் யாரென்று கூறமுடியாது ஆனால் பலர் உள்ளனர்.

என கூறி முடித்த அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் யார் யாரெல்லாம் வில்லனாக செயல்பட்டார்கள் என்பது பற்றி தனது வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் வெளிவரும் எனவும் கூறினார். 

Previous Post Next Post

Your Reaction