திண்டாடும் மிடில் ஆர்டர், முட்டுக்கொடுத்து இந்தியாவை காப்பாற்றும் ஓப்பனிங் பேட்டர்கள் ! திடுக் ரிப்போர்ட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா சரித்திர வெற்றி பெற்று 1 - 0* என தொடரில் முன்னிலை பெற்றது, இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 2வது போட்டி நேற்று ஜோகனஸ்பர்க் நகரில் துவங்கியது.


நேற்றைய 2வது போட்டியில் களமிறங்கிய இந்தியாவிற்கு கேப்டன் விராட் கோலி முதுகு பிடிப்பு காரணமாக விலகினார், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்ற கேஎல் ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

மோசமான பேட்டிங்:

இதை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 26 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும் அடுத்ததாக வந்த அனுபவ வீரர்கள் புஜாரா 3 ரன்களிலும் அஜிங்கிய ரஹானே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

இதனால் ஏற்பட்ட சரிவில் இருந்து இந்தியாவை மீட்க போராடிய கேப்டன் ராகுல் பொறுப்புடன் பேட்டிங் செய்து அரைசதம் அடித்து 50 ரன்கள் எடுத்த உடன் அவுட் ஆனதால் 116/5 என்ற மோசமான நிலையில் தள்ளாடிய இந்தியா 200 ரன்களை தொடுமா என்ற நிலை ஏற்பட்டது, அந்த நேரத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 17 ரன்களில் ஏமாற்ற கடைசியில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 பந்துகளில் 46 ரன்கள் குவித்து கை கொடுத்ததால் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

  • தென் ஆப்பிரிக்கா சார்பில் பந்துவீச்சில் அசத்திய மேக்ரோ ஜன்ஷன் 4 விக்கெட்டுகளும் ரபாடா மற்றும் ஒலிவர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

திண்டாடும் மிடில் ஆர்டர்:

  • நேற்றைய முதல் நாளில் தொடக்க வீரர்கள் ராகுல் - அகர்வால் மற்றும் அஸ்வின் இல்லை என்றால் இந்தியா 200 ரன்களை தொட்டிருக்காது என்றே கூறலாம்.

நேற்றைய போட்டி மட்டுமல்லாது கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் அதல பாதாளத்தில் தத்தளிக்கிறது என்று கூறினால் மிகையாகாது, குறிப்பாக அனுபவம் வீரர்களாக இருக்கும் விராட் கோலி மற்றும் புஜாரா, ரஹானே ஆகியோரின் மோசமான பார்ம் நேற்று உட்பட கடந்த ஒரு வருடமாக இந்தியாவை முக்கியமான நேரத்தில் எதிரிகளிடம் சரணடைய வைக்கிறது.

காப்பாற்றும் ஓப்பனிங் பேட்டர்கள்:

இருப்பினும் கூட 2021இல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் ஓவல், தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் உள்ளிட்ட பல வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சரித்திர வெற்றி பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளை இந்தியா பெறுவதற்கு பேட்டிங் துறையில் ஓபனிங் வீரர்கள் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். அதை பற்றி பார்ப்போம்:

1. காபா பிரிஸ்பேன், 2021:

ஆஸ்திரேலியாவின் காபா நகரில் கடந்த ஜனவரி 2021இல் இந்தியா வெற்றி பெற்றது எவராலும் மறக்கமுடியாது, அப்போட்டியில் 2வது இன்னிங்ஸ்ஸில் ரிஷப் பண்ட் 89* ரன்கள் குவித்து வெற்றிபெற செய்தாலும் முதல் இன்னிங்சில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 44 ரன்களும் 2வது இன்னிங்ஸில் சுப்மன் கில் 91 ரன்கள் எடுத்து இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு விட்டார்கள்.

2. லார்ட்ஸ், 2021:

கடந்த செப்டம்பர் 2021இல் இங்கிலாந்தில் நடந்த அந்த அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது, அப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஜோடி இணைந்து 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  • இதில் ரோஹித் சர்மா 83 ரன்கள் விளாச கேஎல் ராகுல் சதம் விளாசி 129 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

3. ஓவல், 2021:

அதே தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸ்ஸில் தொடக்க வீரர் ராகுல் 46 ரன்கள் எடுக்க மறுபுறம் விஸ்வரூபம் எடுத்த ரோகித் சர்மா சதமடித்து 127 ரன்கள் விளாசினார்.

  • இதன் காரணமாக 157 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது வரை 2 - 1* என முன்னிலையில் உள்ளது.

4. செஞ்சூரியன், 2021:

தற்போது நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுக்க மறுபுறம் சிறப்பாக தொடர்ந்து பேட்டிங் செய்த ராகுல் 123 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

  • அந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 1 - 0* என தொடரில் முன்னிலையில் உள்ளது.

மேற்கூறிய புள்ளி விவரங்களில் இருந்து கடந்த ஒரு வருடங்களாக முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் அடங்கிய மோசமான மிடில் ஆர்டர் ரன்கள் குவிக்க தவறி வரும் போதிலும் அந்த பாரம் இந்தியாவின் மீது விழாமல் ஓபனிங் வீரர்கள் முட்டுக் கொடுத்து தாங்கிப் பிடிப்பது தெளிவாக தெரிகிறது, எனவே இனி வரும் போட்டிகளிலாவது இந்தியாவின் மிடில் ஆர்டர் வலுப்பெறுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Previous Post Next Post

Your Reaction