2வது டெஸ்ட் : புத்தாண்டில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்த தென்ஆப்பிரிக்கா !

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது, இதில் கடந்த டிசம்பர் 26 அன்று துவங்கிய முதல் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்றது.

Photo Credits : Getty Images


இதை அடுத்து 1 - 0* என முன்னிலை பெற்ற இந்தியா ஜொகனஸ்பர்க் நகரில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இன்றி களமிறங்கியது, இப்போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

மோசமான பேட்டிங்:

இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவை முதல் போட்டி போலல்லாமல் மிகச் சிறப்பாக பந்துவீசி மடக்கிப் பிடித்த தென்னாபிரிக்கா 202 ரன்களுக்குள் சுருட்டியது, அதிகபட்சமாக ராகுல் 50 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர்.

  • இந்தியாவின் மோசமான பேட்டிங்கை பயன்படுத்திய தென் ஆப்பிரிக்கா நிதானத்துடன் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 229 ரன்கள் குவித்து இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது, அதிகபட்சமாக பீட்டர்சன் 62 ரன்களும் 51 ரன்களும் எடுத்தனர், இந்தியா சார்பில் பந்துவீச்சில் ஆச்சரியப்படுத்திய ஷார்துல் தாகூர் 7 விக்கெட்டுகள் சாய்த்து சாதனை படைத்தார்.

240 ரன்கள் மட்டும் இலக்கு:

இதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு தூண்களாக இருந்த தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் அகர்வால் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர், அடுத்து வந்த புஜாரா - ரகானே பார்ம் இல்லாத காரணத்தால் இந்தியாவின் கதை முடிந்தது என எதிர்பார்த்த வேளையில் இந்த அனுபவம் வாய்ந்த ஜோடி 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு மீட்டெடுத்தது.

  • இதில் ரகானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்களும் எடுத்து முக்கியமான நேரத்தில் அவுட்டாக அடுத்து வந்த விக்கெட் கீப்பர் பண்ட் பொறுப்பில்லாமல் டக் அவுட்டானார், இறுதியில் ஹனுமா விஹாரி போராடி 40* ரன்கள் எடுக்க 266 ரன்களுக்கு மீண்டும் ஆல் அவுட் ஆன இந்தியா தென்னாபிரிக்கா வெற்றி பெற 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

தென்ஆப்பிரிக்கா பதிலடி:

இதை அடுத்து 240 என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு மார்க்ரம் 31 ரன்கள், பீட்டர்சன் 28 ரன்கள் எடுக்க 3வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் மட்டும் இழந்து வெற்றிக்கு 122 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நல்ல நிலையில் இருந்தது.

இறுதியில் இன்று துவங்கிய 4வது நாளில் மழையின் குறுக்கீடுக்கு பின் தொடர்ந்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா விற்கு அந்த அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரர் டீன் எல்கர் தொடர்ந்து இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

  • இவரை அவுட் செய்ய இந்தியா கையாண்ட அத்தனை திட்டங்களும் தோல்வியில் முடிவடைய கடைசியில் 188 பந்துக்கள் சந்தித்து 10 பவுண்டரிகள் உட்பட 96* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்கர் தனது அணியை கேப்டனாக முன்னின்று வெற்றி பெறச் செய்தார்.
  • இன்றைய முக்கியமான நாளில் வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடிய போதிலும் இந்திய பவுலர்கள் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த காரணத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

வரலாற்று தோல்வி:

இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1 - 1 என சொந்த மண்ணில் சமன் செய்த தென்ஆப்பிரிக்கா இந்த 2022ஆம் ஆண்டின் முதல் போட்டியில் இந்தியாவிற்கு தோல்வியை பரிசு அளித்தது.

இந்த தோல்வியால் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் முதல் முறையாக இந்தியா தோல்வி அடைந்து பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது, இதற்கு முன் இந்த மைதானத்தில் பங்கேற்ற 5 போட்டிகளில் 2 வெற்றிகளை சந்தித்த இந்தியா 3 போட்டிகளை டிரா செய்தது ஆனால் இப்போது வரலாற்றில் முதல் முறையாக தோற்றுள்ளது.

Previous Post Next Post

Your Reaction