2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையிலும் 2022 டி20 உலகக் கோப்பையிலும் விளையாடும் 4 வீரர்களின் பட்டியல்

ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 9வது முறையாக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 2007 முதல் நடைபெற்று வரும் இந்த உலக கோப்பை வரலாற்றின் 16 வருடங்களில் ஏராளமான வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றாலும் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் வயது காரணமாக கிட்டத்தட்ட 99% வீரர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். ஆனால் 2007 உலக கோப்பையில் விளையாடி இருந்தால் 4 வீரர்கள் மட்டும் சில வீரர்கள் மட்டும் காலம் கடந்து தங்களது திறமையாலும் உழைப்பாலும் இம்முறை நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர். அவர்களை பற்றி பார்ப்போம்:

Photo : Getty Images 


4. சீன் வில்லியம்ஸ்: ஜிம்பாப்வே அணியில் நவீன கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் இவர் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் அணியில் இடம்பெற்றிருந்த போதிலும் விளையாடவில்லை. அப்போது இளம் வீரராக இருந்த இவர் தற்போது 35 வயதை கடந்து 58 போட்டிகளில் 1274 ரன்களைக் குவித்து அனுபவம் வாய்ந்த வீரராக ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்க உள்ளார். அந்த வகையில் மூத்த வீரரான இவர் தனது அனுபவத்தை ஆஸ்திரேலியாவில் காண்பித்து தங்களது அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


3. சாகிப் அல் ஹசன்: கடந்த 2006இல் இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு விளையாடினார். அதன்பின் வங்கதேசத்தின் ஜாம்பவான் ஆல்-ரவுண்டராக நிறைய சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து தற்போது 35 வயதில் அனுபவ நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள இவர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் கேப்டனாக களமிறங்க உள்ளார்.


இதுவரை 101 போட்டிகளில் 2045 ரன்களையும் 122 விக்கெட்டுகளையும் எடுத்து ஏகப்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள இவர் தங்களது அணியை மிகச் சிறப்பாக வழிநடத்துவார் என்று வங்கதேச ரசிகர்கள் நம்புகின்றனர்.


2. ரோஹித் சர்மா: கடந்த 2006இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் 2007இல் தோனி தலைமையிலான அணியில் இடம்பிடித்து பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் உட்பட கிடைத்த வாய்ப்புகளில் வெற்றிக்கான முக்கிய ரன்களை சேர்த்து வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அதன்பின் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வரும் இவர் 136 போட்டிகளில் 3620 ரன்களை குவித்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்து இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறப்போகும் உலக கோப்பையில் கேப்டனாக வழி நடத்தும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி கொண்டுள்ளார்.


மேலும் வரலாற்றில் நடைபெற்ற அத்தனை உலக கோப்பையிலும் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ள இவர் இம்முறை கேப்டனாக இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்ற கொடுப்பாரா என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


1. தினேஷ் கார்த்திக்: காலத்தை வென்ற காவியத் தலைவனாக கடந்த 2006இல் ஜொகனஸ்பர்க் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக இந்தியா களமிறங்கிய டி20 போட்டியில் இடம் பிடித்திருந்த அணியில் இப்போதும் விளையாடும் ஒரே வீரர் என்ற பெருமை பெற்றுள்ள இவர் 37 வயதிலும் தம்மால் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவில் விளையாட தேர்வாகியுள்ளார். கடந்த 2007இல் நடந்த உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இவர் இம்முறை பினிஷராக செயல்பட்டு கோப்பையை வென்று தன்னுடைய லட்சிய பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Previous Post Next Post

Your Reaction